'கோழிகளைக் கூண்டில் அடைக்காதீங்க" - புகார் கடிதம் அனுப்பிய ஓய்வுபெற்ற நீதிபதிகள்! | "End practice of hens in battery cages" says retired judges

வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (02/04/2019)

கடைசி தொடர்பு:20:04 (02/04/2019)

'கோழிகளைக் கூண்டில் அடைக்காதீங்க" - புகார் கடிதம் அனுப்பிய ஓய்வுபெற்ற நீதிபதிகள்!

உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். கோழிகளைக் கூண்டில் அடைத்துவைப்பது கருணையற்ற செயல். அதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், இதுதொடர்பாகப் புதிய கருணை அடிப்படையிலான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டுமென்றும் அதில் கூறியுள்ளனர். இது, கோழிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்றும், நாட்டிலுள்ள முட்டைகள் உற்பத்தி ஆரோக்கியமாக நடைபெறுவதற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி A.K. சிக்ரி மற்றும் S.N. திங்ரா ஆகியோர், இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி.கே. மிஸ்ராவுக்கு தனித்தனியாக அனுப்பிய கடிதங்களில் இதைக் கூறியுள்ளனர். பண்ணைகளில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய கோழிகள் அசையக்கூட வழியில்லாத மிகச்சிறிய கூண்டுகளைப் பயன்படுத்துவது, விலங்குகளின்மீது நடக்கும் கொடூரங்களைக் கட்டுப்படுத்தும் (Prevention of Cruelty to Animals Act) சட்டத்திற்குப் புறம்பானது. இந்த சட்டவிரோதச் செயலை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.

கோழி

ஏற்கெனவே இதுகுறித்து வெளியான விதிமுறைகளில், ஒவ்வொரு கோழிக்கும் போதுமான இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவை சுதந்திரமாக நகர்வதற்கு ஏற்ப, உணவு எட்டும் தூரத்தில் அவற்றுக்கான இடம் இருக்க வேண்டும். போதுமான அளவு கோழிகளுக்கு இடமிருந்தால்தான், அவற்றிடம் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். அவைதாம், மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தவையாக இருக்கும். ஆனால், எந்தக் கோழிப்பண்ணையும் அதைச் செய்வதில்லை. ஆகவே, இந்தப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு, கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டுமென்று, அந்தக் கடிதத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.