ஊழல் தடுப்பு: இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி!  | To check corruption in India, CVC to train officials in Europe 

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (02/04/2019)

கடைசி தொடர்பு:22:15 (02/04/2019)

ஊழல் தடுப்பு: இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி! 

ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து இந்திய அதிகாரிகளுக்கு ஐரோப்பாவில் பயிற்சி அளிக்க, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முடிவுசெய்துள்ளது. 

ஊழல் தடுப்பு ஆணையம்

மத்திய ஐரோப்பியாவில் உள்ள ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள சர்வதேச ஊழல் தடுப்பு பயிற்சி மையத்தில், இது  தொடர்பாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ள மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சிவிசி ( Central Vigilance Commission - CVC), இதற்கான அதிகாரிகள் யார் யார் என்பதைத் தேர்வுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  

இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள, இத்துறையின் தலைமை  கண்காணிப்பு அதிகாரிகள் அந்தஸ்தில் இருப்பவர்கள், சிவிசி-க்காக நாட்டின் தொலை தூர இடங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதா என்பது குறித்து சோதனை நடத்தியவர்களாகவும், அது தொடர்பான இதர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களாகவும் இருப்பவர்களே தகுதி வாய்ந்தவர்கள். 

அத்தகைய அதிகாரிகள் யார் யார் என்பதைத் தெரிவிக்குமாறு, பிராந்திய அளவிலான தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சி பெறப்போகும் அதிகாரிகள், ஏப்ரல் 1-ம் தேதி கணக்கின்படி கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு வெளிநாட்டிலும் பயிற்சி எதுவும் பெற்றிருக்கக் கூடாது. 

சர்வதேச ஊழல் தடுப்பு பயிற்சி மையம், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடையே காணப்படும் அறிவு பற்றாக்குறை மற்றும் பயிற்சியின்மையைப் போக்குவதற்குத் தேவையான கற்றலையும் பயிற்சியையும், எதிர்காலத்தில் இத்துறையில், எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த விழிப்புணர்வையும் அளிக்கிறது. 

லஞ்சப் பணம்

இதுபோன்ற ஊழல் தடுப்பு பயிற்சியில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்திய அதிகாரிகள் கலந்துகொள்வதற்கான செலவினங்களுக்காக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு 240 கோடி ரூபாய், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையில், ஊழல் தொடர்பாக  23,609 புகார்கள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 12,089 புகார்கள் ரயில்வே ஊழியர்களுக்கு எதிரானது என்றும், 8,000-க்கும் அதிகமான புகார்கள் பல்வேறு வங்கி அதிகாரிகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க