ஆக்மென்டட் ரியாலிட்டி, பிக் டேட்டா, ஆட்டோமேஷன்... சில்லறை விற்பனைத்துறையின் தலைகீழ் மாற்றம்! | Technology Shaping the Future of Retail! 

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:11 (03/04/2019)

ஆக்மென்டட் ரியாலிட்டி, பிக் டேட்டா, ஆட்டோமேஷன்... சில்லறை விற்பனைத்துறையின் தலைகீழ் மாற்றம்!

2020 வாக்கில், இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டியில் மிக அதிகமாக செலவிடப்போகும் துறையாக சில்லறை விற்பனைத்துறை திகழும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைக்கு வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவே இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக்மென்டட் ரியாலிட்டி, பிக் டேட்டா, ஆட்டோமேஷன்... சில்லறை விற்பனைத்துறையின் தலைகீழ் மாற்றம்!

ந்திய சில்லறை விற்பனைத்துறை, உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்று. இந்நிலையில், தொழில்நுட்பமும் நவீன கண்ணோட்டமும்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன. இதுவரை பெரிய அளவில் அமைப்புசாரா துறையாகத் திகழ்ந்த சில்லறை விற்பனைத்துறை, தற்போதைய டிஜிட்டல்மயமாக்கலால் அமைப்புசார்ந்த துறையாக மாற்றம் கண்டுவரும் நிலையில், இந்தத்துறை எதிர்காலத்தில் இன்னும் பல மாற்றங்களுக்குள்ளாகும் என்கிறார்கள் துறை நிபுணர்கள். 

சில்லறை விற்பனை

அனுபவங்களிலிருந்து மாற்றம்

இதுநாள்வரை பெரிய நிறுவனங்களால் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சில்லறை விற்பனைத்துறை, ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, வெகுவாகக் கவனம் ஈர்த்துள்ளது. ரிலையன்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் சில்லறை விற்பனைத் துறையில் பெரிய அளவில் கால் பதிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

சில்லறை விற்பனைத்துறையில் பல்வேறு புதுமையான கண்ணோட்டங்களும் உத்திகளும் அறிமுகமாகிவரும் சூழலில், வரவிருக்கும் நாளில் வாடிக்கையாளர்களின் அனுபவங்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் மூலம் உருவாக்கப்படும் புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படலாம். அதாவது, குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது பிராண்டைப் பயன்படுத்தும்போது அது எத்தகைய அனுபவத்தைக் கொடுக்கிறது என்பதை, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளுடன் நுகர்வோர் தெரிவிக்கும் கருத்துகள், விருப்பங்கள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் அதில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

எனவே, வாடிக்கையாளர்களின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இனி சந்தையின் போக்கு தீர்மானிக்கப்படும். வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாட அல்லது அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இன்றைய நவீன தொழில்நுட்பம் வெகுவாகவே கைகொடுக்கிறது. இத்தகைய நிலையில், குறிப்பிட்ட ஒரு பிராண்டின் அல்லது பொருளின் பயன்பாட்டு அனுபவம்குறித்து நுகர்வோர் கருத்து தெரிவிக்கும்போது, அது அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. 

ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி 

மேற்கூறிய முறைகள் தவிர்த்து, சில்லறை விற்பனைத்துறையின் போக்கை (Trend) அடுத்ததாகத் தீர்மானிக்கப்போவது ஆக்மென்டட் ரியாலிட்டி (Augmented Reality) மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) தான். 

வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது உங்களுக்கு கற்பனையான உலகத்தைக் கொடுக்கும் என்றால், ஆக்மென்டட் ரியாலிட்டி உங்களுக்கு நிஜத்தையும் கற்பனையையும் சேர்த்துக் கொடுக்கும். 

அதாவது, உங்களைச் சுற்றியுள்ள உலகை, டெக்னாலஜிக் கண்கள் மூலம் வீடியோ, ஒலி மற்றும் கிராபிக் போன்றவற்றின் உதவியால் தெரியவைக்கும் உயர்ந்த ஒரு டெக்னாலஜி. இது மென்பொருளை அடிப்படையாகக்கொண்டது; இயற்கையான ஒரு பொருளை உங்கள் கற்பனைக் கண்களின் உதவியால் அடுக்கடுக்காகக் காணவைப்பதுதான் இதன் சிறப்பம்சம். இந்த மென்பொருளில் கேமரா, காம்பாஸ் மற்றும் ஜி.பி.எஸ் போன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களும் இணைக்கப்படும். உலகில் பலரைக் கவர்ந்த `போகிமான் கோ' விளையாட்டு, இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜியை அடிப்படையாகக்கொண்டதே.

ஆக்மண்டட் ரியாலிட்டி

2020 வாக்கில், இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டியில் மிக அதிகமாகச் செலவிடப்போகும் துறையாகச் சில்லறை விற்பனைத்துறை திகழும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தற்போதைக்கு வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோர்களின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகவே இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அன்றாட விற்பனைச் செயல்பாடுகள், அதாவது கடை வடிவமைப்பு, அலமாரிகளில் வைக்கப்படும் பொருள்களை வகைப்படுத்துதல் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றுக்குதான் இந்த வெர்ச்சுவல் ரியாலிட்டி பயன்படுகிறது. 

அதேசமயம் ஆக்மென்டட் ரியாலிட்டியின் பயன்பாடு, சில்லறை விற்பனைத் துறையில் இன்னும் வேகமெடுக்கவில்லை. குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது இடங்களில் மட்டும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றபோதிலும், வரும் நாள்களில் இந்தத் துறையில் இதன் பயன்பாடு மிக அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் அல்லது ஒரு குறிப்பிட்ட பிராண்ட், மிக அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்வது மிக அவசியமானது. அப்படியான சூழலில், சில்லறை விற்பனை குறித்த பகுப்பாய்வு தகவலைப் பெறுவதில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மிகவும் உதவும்.

ஷாப்பிங் டிரெண்டிங் அல்லது வாடிக்கையாளர்கள் எந்த பிராண்டு பொருளை அதிகமாக வாங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய உதவும். இவற்றுக்கும் மேலாக, வாடிக்கையாளர்கள் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தபடியே பொருள்களை விமர்சனம் செய்யவும் அல்லது மற்ற பிராண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் நவீன தொழில்நுட்பங்கள் உதவும். இதனால், குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது பிராண்டின் தரம் குறித்த தகவல்கள் 24 மணி நேரமும் கிடைப்பதை இவை மேலும் உறுதிசெய்யும். 

பிக் டேட்டா

சில்லறை விற்பனைத்துறையில் பிக் டேட்டா விற்பனையைக் கண்காணிக்கவும் வாங்குபவர்கள் அல்லது வாங்கப்படும் பொருள்கள் குறித்த பகுப்பாய்வுசெய்வது உள்ளிட்ட பல்வேறு தரவுகளைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பிக் டேட்டா பயன்பாடு, சில்லறை விற்பனைத்துறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதேசமயம் எதிர்காலத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சில்லறை விற்பனைத்துறையைப் பொறுத்தமட்டில், ஒரு பொருள் மக்களிடையே எந்த அளவுக்குப் பிரபலமாகியுள்ளது அல்லது சென்றடைந்துள்ளது மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள், எந்த வகையான பிரிவினர் இந்தப் பொருள்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது போன்ற பல்வேறு சேவைகளை சம்பந்தப்பட்ட பொருளின் தயாரிப்பாளர்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு இந்த பிக் டேட்டா அளிக்கிறது. இவற்றின் மூலம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்னவாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

பிக் டேட்டா

பல வகையான விற்பனைச் சந்தை 

பாரம்பர்யமான விற்பனைச்  சந்தை முறையிலிருந்து பல வகையான விற்பனைச் சந்தைமுறைகளுக்கு, சில்லறை விற்பனைத்துறை நகர்ந்துள்ளது. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது தொலைபேசி, இணையதளம் என அனைத்து வகையான சாதனங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனைப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு சாதனம் மொபைல்போன். ஒரே ஒரு பட்டனை க்ளிக் செய்தாலே போதும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களும் ஆன்லைனில் கிடைத்துவிடும். இதனாலேயே, விற்பனையாளர்களும் தங்களது கடைகளை ஆன்லைனில் திறப்பது கட்டாயமாகிவிட்டது. இவ்வாறு சில்லறை விற்பனைத் துறையின் டிஜிட்டல் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையான மற்றும் இணக்கமான ஒன்றாக அதை ஆக்கிவிட்டது. கூடவே, விற்பனையாளர்களுக்கும் தங்கள் பொருள்களின் உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களிடம் அது குறித்து விளம்பரம் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

ஆட்டோமேஷன் 

இன்னொரு புறம் அனைத்துத் துறைகளிலும் பரவலாக ஆட்டோமேஷன் அறிமுகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனைத் துறையும் அதிலிருந்து தப்பிவிடுமா என்ன?

கேஷியர் என ஒருவர் இல்லாமலேயே பொருள்களை விற்கும் ஆட்டோமேஷன் முறை, பல இடங்களில் சிறிய கடைகளிலிருந்து பெரிய கடைகள் வரை அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. இதனால் விற்பனையாளர்களுக்கு என்ன பயன் என்று கேட்டால், வாடிக்கையாளர்கள் முற்றிலும் மாறுபட்ட முறைகளில் அணுகப்படுகிறார்கள். கூடவே இந்தப் புதுமையான முறை மூலம் விற்பனையும் அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Online Sales

தொழில்நுட்பத்தை நோக்கிய இந்த இயற்கையான நகர்வு, வருங்காலத்தில் சில்லறை விற்பனைத்துறையை இன்னும் பல மாற்றங்களை எதிர்நோக்கச் செய்யலாம். ஆகையால், சில்லறை விற்பனைத்துறையில் இன்னும் ஆதிகால நடைமுறைகளையே பின்பற்றுபவர்கள், அதிலிருந்து விடுபட்டு நவீன தொழில்நுட்பம் மற்றும் போக்குக்கு ஏற்ப விரைவில் மாற வேண்டியது அவசியம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்