`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி | ISRO answers to NASA

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:44 (03/04/2019)

`இது ஒன்றும் வெடிப்பு கிடையாது!’ - மிஷன் சக்தி தொடர்பான நாசா குற்றசாட்டுக்கு இஸ்ரோவின் பதிலடி

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டம் தொடர்பாக நாசா வைத்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரோ பதிலளித்துள்ளது. 

மிஷன் சக்தி

செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் விண்ணில் தாக்கி அழிக்கும் நுட்பத்தை, இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததைக் கடந்த வாரம், பிரதமர் மோடி பெருமிதத்துடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு இந்தச் சோதனையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த நாடு இந்தியா என்று மிஷன் சக்தி குறித்துப் பேசினார் மோடி.

இந்த நிலையில், இந்திய ஏவுகணையால் தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியின் புவி சுற்று வட்டப் பாதையில் மிதப்பதாகவும், இதன் காரணமாக விண்வெளியில் கட்டப்பட்டுவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் நாசா குற்றம்சாட்டியது. 

ஜிம் பிரிடன்ஸ்டைன்

இது தொடர்பாகப் பேசிய நாசா விண்வெளி மைய நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன், ``விண்வெளியில் தங்கள் நாட்டு செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக இந்தியா ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை நேரடியாகத் தகர்த்து சோதனை நடத்தியுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. மிக மிக மோசமான செயல். அந்த ஏவுகணை தகர்த்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள், விண்வெளிச் சுற்று வட்ட பாதையில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இந்த ஒரு நிகழ்வால், 400 பாகங்கள் குப்பைகளாக மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியா நடத்திய இந்தச் சோதனையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏற்படும் ஆபத்து 44% அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாடும் விண்வெளியில் உள்ள சூழல் அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்றார். 

இஸ்ரோ

இந்த நிலையில், நாசாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ பதிலளித்துள்ளது. இஸ்ரோ தலைவரின் மூத்த ஆலோசகர் தபன் மிஸ்ரா மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ``சில நேரங்களில் நல்ல நண்பர்கள்கூட நமது வீட்டுத் திருமணங்களில் வந்து குறை சொல்வார்கள். உணவு சரியில்லை... அது சரியாக இல்லை என்றெல்லாம் கூறுவார்கள். நாம் புதிதாக ஒரு முயற்சி செய்யும்போது அனைத்து நேரங்களிலும் நமக்கு மாலைகள் கிடைப்பது கிடையாது. மிஷன் சக்தியின் பரிசோதனை விண்வெளியில் 300 கிலோமீட்டர் தூரத்தில்தான் நடைபெற்றது. அங்கு காற்றின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் 6 மாதத்தில் அவை தானாக அழிந்துவிடும். 

மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ நடத்திய இந்தச் சோதனை ஒரு வெடிப்பு கிடையாது. ஒரு புல்லெட் தாக்கியதுபோல்தான் இது தாக்கும். சீனா 2007-ம் ஆண்டு இந்தப் பரிசோதனையை 800 கிலோ மீட்டர் தூரத்தில் செய்தது. அங்கு காற்றின் அழுத்தம் இருக்காது. அதனால் அந்தக் குப்பைகள் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் திறன் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். அவர்கள் சரியான விதத்தில் இந்தச் சோதனையை நிகழ்த்தியதாக உறுதிப்பட சொல்ல முடியும். அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எந்த விதத்திலும் அவமானம் நேரும் வகையில் இது செய்யப்படவில்லை. 

விண்வெளியில் ஏற்கெனவே குப்பைகள் இருக்கிறது. அனைத்து நாடுகளும் அதை ரேடார், கேமரா மற்றும் தொலைக்நோக்கு கருவிகளின் உதவிகளுடன் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற பாகங்களின் மீது செயற்கைக்கோள் மோதும் சூழல் உருவானால், செயற்கைக்கோளின் திசையை மாற்றிவிட முடியும். விண்வெளியில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எப்போதும் செயல்பட்டது கிடையாது” என முடித்தார்.