``பொய்களால் நிரப்பப்பட்ட வெற்று அறிக்கை!” - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மோடி! | Congress manifesto eyewash says PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:23 (04/04/2019)

``பொய்களால் நிரப்பப்பட்ட வெற்று அறிக்கை!” - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மோடி!

பிரதமர் மோடி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடப்பதால் திராவிடக் கட்சிகள் அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், வடஇந்தியாவில் காங்கிரஸ் - பா.ஜ.க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கடுமையாகத் தாக்கி அருணாசலப் பிரதேசத்தில் நடந்து வரும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 

தேர்தல் பிரசாரக் கூட்டம்

அப்போது அவர் பேசியதாவது, ``இந்த நாட்டை 60 ஆண்டுகளாக ஆண்டவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நான் 60 மாதங்கள்தான் இருந்திருக்கிறேன். என்ன செய்தேன் என்று உங்களுக்கே தெரியும். காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெறும் பொய்களால் நிரப்பப்பட்ட கண் துடைப்பு அறிக்கை. காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 2009-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டின் தரவுப்படி 18,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஒரு பொய்யான பாசாங்கு காட்டும் அறிக்கையைதான் வெளியிட்டுள்ளது.

அரசியலில் திவாலான காங்கிரஸ் கட்சி துரோகிகளைப் பலப்படுத்துகிறது. ஆனால், உங்களுடைய காவலன் அவர்களை எதிர்த்து நிற்பார். நாங்கள் சாலைகளை மேம்படுத்தியுள்ளோம். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமானத்துறைகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் மின் விளக்குகளால் அலங்கரித்தோம். அருணாசலப் பிரதேசத்தை கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்” என்றார்.