`நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு!' - ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கும் சரிதா நாயர் | Saritha Nair contest against Rahul Gandhi in wayanad constituency?

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:10 (04/04/2019)

`நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கு!' - ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கும் சரிதா நாயர்

டைபெற இருக்கும் 17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார். கேரள மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். இது ஒருபுறமிருக்க... மறுபுறம் இவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகை சரிதா நாயர் களமிறங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சரிதா நாயர்

இதுகுறித்து சரிதா நாயர், ``நான் வயநாடு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட இருக்கிறேன். வயநாடு தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ராகுலை எதிர்த்துப் போட்டியிடவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிடுவதால் பொதுமக்களிடம் பிரபலம் ஆக வாய்ப்பிருக்கிறது. அதன்மூலம், கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், பாலியல் பிரச்னைகளை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார். 

இந்த நிலையில், ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீரும் போட்டியிட உள்ளனர். இவர்களுடன் சரிதா நாயரும் இணைந்திருப்பதால், வயநாடு தொகுதி இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டிய தொகுதியாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை, எர்ணாகுளம் தொகுதி வேட்பாளராகக் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரிதா நாயர், அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க