2017-ல் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 12 லட்சம் பேர் இறப்பு... வெளியான அதிர்ச்சி அறிக்கை! | 12 lakhs people dies in India due to pollution

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (04/04/2019)

2017-ல் இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 12 லட்சம் பேர் இறப்பு... வெளியான அதிர்ச்சி அறிக்கை!

காற்று மாசுபாட்டால் உண்டாகும் நோய்கள் காரணமாக 2017-ம் ஆண்டில், இந்தியாவில் மட்டும் 12 லட்சம் பேர் இறந்திருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும், ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பு உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு இந்த முடிவை வெளியிட்டுள்ளது. 

இந்தியா - காற்று மாசுபாடு

அந்த ஆய்வில் காற்று மாசுபாடு பாதிப்பால் சர்க்கரை நோய், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் 2017-ம் ஆண்டில் உலக அளவில் 50 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கைக் கொண்ட நாடுகளாக இந்தியாவும், சீனாவும் இடம்பிடித்துள்ளது. இரண்டு நாடுகளிலும் காற்று மாசுபாட்டால் மொத்தம் 24 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

இந்திய அளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக காற்று மாசுபாடு அமைந்துள்ளது. தெற்கு ஆசியாவில் காற்று மாசுபாடு காரணமாக பிறக்கும் குழந்தையின் வாழ்நாளில் 2 வருடம் 6 மாதங்கள் குறைகிறது. இதுவே உலக அளவில் உள்ள நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்நாளில் 20 மாதங்கள் மட்டுமே குறைகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் இந்தியாவும், சீனாவும்தான் எனத் தெரிவித்துள்ளது. 

ஒரு குண்டுவெடிப்பு நடந்தால்கூட இத்தனை லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அதனால் சுற்றுச்சூழல் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த ஆய்வை முழுமையான ஆய்வு என்று குறிப்பிட முடியாது. ஆனாலும், அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லவும் முடியாது. அதிக அளவிலான மாசுகளால் அதிகமான மக்கள் இறந்திருப்பதை நிச்சயம் கவனிக்க வேண்டும்.