`மல்லையா பாவம்.. வாரத்துக்கு 6 லட்சம்தான் செலவு செய்கிறார்!' - வருத்தத்துடன் சொன்ன வழக்கறிஞர் | Lawyer mentioned Vijay mallya weekly spending in London high court  

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (04/04/2019)

கடைசி தொடர்பு:14:03 (04/04/2019)

`மல்லையா பாவம்.. வாரத்துக்கு 6 லட்சம்தான் செலவு செய்கிறார்!' - வருத்தத்துடன் சொன்ன வழக்கறிஞர்

ஒரு காலத்தில் ஆடம்பரமான வாழ்கையில் வாழ்ந்து திளைத்த `King of good times’ விஜய் மல்லையா, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இன்று அனைத்துச் சொத்துகளும் திவாலாகி, தன் மனைவி, குழந்தைகள், உதவியாளர் என அனைவரையும் பிரிந்து வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.  

விஜய் மால்லையா

தற்போது லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, பாரதிய ஜனதா கட்சியினர் தன்னைக் கடன் வாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு ஓடிப்போனவன் எனச் சொல்வதைக் கண்டித்து அண்மையில் ட்வீட் பதிவிட்டிருந்தார். ``நான் வாங்கிய ரூ.9,000 கோடி கடனுக்காக, இரண்டு மடங்காக என்னுடைய சொத்துகளை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள். இதைப் பிரதமர் மோடியே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது என்னை பா.ஜ.க-வின் செய்தி தொடர்பாளர், 'கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன்' எனக் கூறுவது ஏன்?’’ என தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தான் 1992-ம் ஆண்டிலிருந்து லண்டன் குடியுரிமை பெற்றவன் என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டிருந்தார். 

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைப் பெற்றுவிட்டு லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் சொத்து விவரங்களை அலசி ஆராய்ந்து வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த மனுவில் மல்லையா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ``விஜய் மல்லையா தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் அவதிப்படும் அளவுக்கு எல்லாம் மல்லையா அவதிப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் எந்தவித பிரச்னையும் இன்றி வாழ்ந்து வருகிறார். ஐரோப்பாவில் இயங்கும் கிங்ஃபிஷர் பீர் நிறுவனத்திலிருந்து அவருக்கு மாதம் 7,500 பவுண்டு வருமானம் வருகிறது. குடும்பச் சொத்துகள், அறக்கட்டளை என அவருக்கு வருமானம் அதிகப்படியாக வந்துகொண்டிருக்கிறது. சூப்பர் பைக்குகள், கார்கள், விலையுயர்ந்த கைவினைப் பொருள்கள் என வாங்கிக் குவிக்கிறார். ஆனாலும் எங்களுக்கான பணம் திரும்ப வரவில்லை’’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா ஒரு வாரத்துக்கு 18,300 பவுண்டு (சுமார் 16 லட்சம்) செலவழிக்கிறாராம். வங்கிகளுக்குக் கடனை திரும்பச் செலுத்துவதற்காக அந்தச் செலவை 6 லட்சமாகக் குறைத்துக்கொண்டுள்ளார் என்று மல்லையாவின் வழக்கறிஞர் எஸ்.பி.ஐ வழக்கறிஞர்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.  

மேலும், விஜய் மல்லையாவின் மனைவியும் தொழில் பாட்னருமான பிங்கி லால்வானி, லண்டனில் தொழில்மூலம் ஈட்டும் வழக்கமான ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் தற்போது ஆண்டுக்கு ரூ.1.35 கோடி அதிகம் ஈட்டுவதாக லண்டன் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதற்கான உரிய விளக்கம் அளிக்கவும் லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க