ரெப்போ விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் தவணை குறையலாம்!  | RBI cuts repo rate; loan EMIs likely to fall

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:15:50 (04/04/2019)

ரெப்போ விகிதம் குறைப்பு: வீட்டுக் கடன் தவணை குறையலாம்! 

ரெப்போ விகிதத்தில் 0.25 அடிப்படைப் புள்ளிகளை  ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால், குறிப்பாக வீட்டுக் கடன்களுக்கான  வட்டி விகிதம் குறையும்  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது. இதுபோலவே வர்த்தக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம், ரிவர்ஸ் ரெப்போ என அழைக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த வட்டி விகிதம் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டுவருகிறது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம், ரெப்போ விகிதம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.  6.50-லிருந்து 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அதில் 0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 

இதனால், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை குறையும் என்பதால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். 

கடன் தவணை குறையும்

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றபின், ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இத்துடன் இரண்டாவது முறையாகும். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில் முதன் முறையாக ரெப்போ வட்டி விகிதம்  0.25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க