தேர்தல் ஆணையத்தை சிறைவைப்பேன்! - சர்ச்சையில் சிக்கினார் பிரகாஷ் அம்பேத்கர் | I will imprison the Election Commission! - Prakash Ambedkar got into trouble

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (04/04/2019)

கடைசி தொடர்பு:16:05 (04/04/2019)

தேர்தல் ஆணையத்தை சிறைவைப்பேன்! - சர்ச்சையில் சிக்கினார் பிரகாஷ் அம்பேத்கர்

"இந்தியத் தேர்தல் ஆணையம், பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது" என சட்ட மாமேதை அம்பேத்கரின் பேரனும், பாரிபா பகுஜன் மகா சங்க கட்சித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். 

தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், அதற்கான வேலைகளில் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஆளும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உதாரணத்துக்கு, நமோ தொலைக்காட்சி தொடங்க அனுமதியளித்தது, கடந்த மார்ச் 31-ம் தேதி நானும்கூட காவலன்தான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசியது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாபூர் மற்றும் அகோலா மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பிரகாஷ் அம்பேத்கர், அங்கு தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இதையொட்டி, அம்மாநிலத்தில் உள்ள யவத்மல் பகுதியில் பேசிய அவர், "ஜனநாயக முறையில் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, புல்வாமா தாக்குதல்குறித்துப் பேச சுதந்திரம் உள்ளது. ஆனால், அதுகுறித்து பேசக் கூடாது என கட்டளையிடப்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியத் தேர்தல் ஆணையத்தை சும்மா விட மாட்டோம். அந்த ஆணையத்தை நிச்சயம் இரண்டு நாள்களுக்குச் சிறைவைப்போம். அவ்வாணையம் பொதுவாகச் செயல்படுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அது, ஆளும் மத்திய பா.ஜ.க அரசுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுகிறது" என்றார். 

இப்படி அவர் பேசியிருப்பது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க