பென்ஷன் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது! - உச்ச நீதிமன்றம் | Supreme Court clears path for pension to rise manifold for employees in all firms

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:18:50 (04/04/2019)

பென்ஷன் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது! - உச்ச நீதிமன்றம்

உச்ச வரம்பு

'வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும், பென்ஷன் பெறுவதற்கு உரிமை உண்டு' என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12%, நிறுவனத்தின் சார்பில் 12% சேர்த்து, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்  டெபாசிட் செய்யப்படும். ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம்  (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக  டெபாசிட் செய்யப்படும். 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேர்பவர்களும், பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை வருங்கால வைப்புநிதி ஆணையம் கடந்த 2018-ல் அறிவித்திருந்தது.

வருங்கால வைப்புநிதி  ஆணையத்தின் திட்டங்களில் இருக்கும் இந்த வேறுபாட்டை எதிர்த்து, கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியாளர்கள் சார்பில் கடந்த 2018-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 15,000 ரூபாய் வரம்புகள் எதுவும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கக் கூடாது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வெறும் 15,000 ரூபாயை அடிப்படை ஊதியமாகக் கருதாமல், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, கடைசியாகப் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தத் தீர்பை எதிர்த்து, வருங்கால வைப்பு நிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை' என கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்திருக்கிறது. இதனால், இனி தனியார் ஊழியர்களுக்கு ஓய்வுக் காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம், பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.