`கருத்து வேறுபாடு கொண்டவர்கள், `ஆன்டி இந்தியன்' அல்ல' - நீண்ட நாள்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த அத்வானி! | Veteran BJP leader LK Advani writes a blog ahead of BJP's Foundation Day on April 6

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (04/04/2019)

கடைசி தொடர்பு:08:49 (06/04/2019)

`கருத்து வேறுபாடு கொண்டவர்கள், `ஆன்டி இந்தியன்' அல்ல' - நீண்ட நாள்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த அத்வானி!

'கட்சியைவிட நாடுதான் முக்கியம்' என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

அத்வானி

பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்த முறை மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சீட் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பா.ஜ.க நிறுவப்பட்ட தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.  அதனை முன்னிட்டு, அத்வானி தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``பா.ஜ.க தொண்டர்கள் அனைவருக்கும் இது முக்கியமான தருணம். பா.ஜ.க-வின் நிறுவனர்களில் ஒருவராக இந்திய மக்களுக்கு, குறிப்பாக பா.ஜ.க தொண்டர்களுக்கு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது என் கடமை என்று கருதுகிறேன். அதற்கு முன்னதாக, என்னை ஆறு முறை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த காந்தி நகர் மக்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 

அத்வானி

14 வயதில் நான் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்ததில் இருந்து நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்துவருகிறேன். எனது அரசியல் வாழ்க்கை என்பது ஏழு தலைமுறைகளாக என் கட்சியுடன் பிரிக்க முடியாதது. பாரதிய ஜன சங்கம்  மற்றும் பாரதிய ஜனதா கட்சி இரண்டையுமே நிறுவியதில் நானும் ஒருவன். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய் போன்ற எண்ணற்ற சுயநலமில்லாத தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து பணிபுரிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். ``நாடுதான் எனக்கு முதன்மையானது; அடுத்தது கட்சி, கடைசியில்தான் எனது நலன்" என்ற கொள்கைதான் என்னுடையது. அனைத்து சூழ்நிலைகளிலும் இந்தக் கொள்கையை முடிந்தவரை பின்பற்றியிருக்கிறேன்.

அத்வானி

பன்முகத்தன்மை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இந்திய ஜனநாயகத்தில் ஒரு மரியாதை இருந்தது. அரசியல்ரீதியாக மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் தேச விரோதிகள் எனச் சொல்வது பா.ஜ.க-வின் கொள்கை அல்ல. நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருக்கும் தங்கள் விரும்பும் கட்சியை நேசிக்கும் சுதந்திரம் உள்ளது. `ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்தல்' என்பது பா.ஜ.க-வின் பெருமையான அடையாளமாக உள்ளது. ஊடகங்கள் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகளிலும் சுதந்திரம், நேர்மை, வலிமை கோருவதில் பா.ஜ.க எப்போதும் முன்னணியில் உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள், அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளில் வெளிப்படையான கவனம் செலுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துதல், ஊழல் இல்லாத அரசியல் ஆகியவை கட்சியின் இன்னொரு முன்னுரிமை ஆகும். 

அத்வானி

தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழா என்பது உண்மை. ஆனால், அது நேர்மையாக நடைபெற வேண்டும். இது அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தேர்தல் நடத்துபவர்கள் மற்றும் அனைவருக்கும் மேலான வாக்காளர்கள் கைகளில் உள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க