பாட்டியின் விசிட்... பத்திரிகையாளர்களுக்கு உதவி... - முதல் நாளே மக்களிடம் ஸ்கோர் செய்த ராகுல் காந்தி! | Rahul Gandhi's Wayanad visit

வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (04/04/2019)

கடைசி தொடர்பு:08:50 (06/04/2019)

பாட்டியின் விசிட்... பத்திரிகையாளர்களுக்கு உதவி... - முதல் நாளே மக்களிடம் ஸ்கோர் செய்த ராகுல் காந்தி!

வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராகுல் காந்தி, பொது மக்களிடம் ஸ்கோர் செய்தார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக, கோழிக்கோடு பகுதியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் கல்பெட்டா பகுதிக்கு வந்த ராகுல், அங்கிருந்து ஓப்பன் வேனில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.

ராகுல் காந்தியை வரவேற்க, பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் ஒரு லட்சம் மக்கள் கல்பெட்டாவுக்கு வந்திருந்தனர். இந்நிலையில், கேரள தொலைக்காட்சி ஒன்றில், வயநாட்டைச் சேர்ந்த எல்சி என்ற மூதாட்டி, ராகுல் காந்தியைப் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

இதை, சிலர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் நின்ற பள்ளிக்கு, எல்சி மற்றும் அவரது மகள் பிரியா, பிரியாவின் குழந்தை ஆகியோர் அழைத்துச்செல்லப்பட்டனர். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில், விவிஐபி-கள் மட்டும் இருந்த ஹெலிபேடு பகுதிக்குச் சென்றதில், எல்சி குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். அவர்களுடன் சற்று நேரம் பேசிய உம்மன் சாண்டி, ராகுல் காந்தி வந்தவுடன் மிகவும் அருகில் அவர்களைச் சந்திக்கவைத்தார்.

ராகுல் காந்தி

இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, ராகுல் காந்தி ஓப்பன் வேனில் பேரணியாக வந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால், பேரிகாட் உடைந்து செய்தியாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மூன்று பேருக்கும் ஆறுதல் சொல்லி, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார்.