`கடின உழைப்பாளி, அதனால்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கு!'- இந்திய விவசாய மாணவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் | An Indian agriculture student got her first job with one crore salary in Canada

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (05/04/2019)

கடைசி தொடர்பு:19:10 (06/04/2019)

`கடின உழைப்பாளி, அதனால்தான் வாய்ப்புக் கிடைத்திருக்கு!'- இந்திய விவசாய மாணவிக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம்

விவசாயம் படித்தால் வருடத்துக்கு ஒரு கோடி சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள், இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியவர் நம் இந்திய மாணவிதான். பெயர் கவிதா ஃபாமன். இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி. அந்த மாநிலத்தில் இருக்கிற லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் முதுகலை விவசாயம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கனடாவின் மிகப் பெரிய விவசாய நிறுவனமான மான்சான்டோ கனடா (monsanto canada), கவிதாவை தன்னுடைய நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராகப் பணிபுரிய அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நிறுவனம் நடத்திய முதல்கட்ட தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டிலும் வெற்றிபெற்ற கவிதாவுக்கு வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் ஆஃபர் செய்திருக்கிறார்கள். 

இந்திய மாணவி கவிதா ஃபாமன்

PC: www.indiatimes.com

``உயிரி தொழில்நுட்பத்தில் மான்சான்டோ லேட்டஸ்ட் டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் உலகளவில் முன்னணியில் இருக்கிறது. அதனால், இந்த நிறுவனத்தில் பணிபுரிய நான் மிக ஆவலாக இருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் அவர்களுடைய அத்தனை உயிரி தொழில்நுட்பங்களையும் என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்ளப் போகிறேன்'' என்று உற்சாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் கவிதா. 

கவிதா ஃபாமன் படித்த பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறைத் தலைவர் (Dean) டாக்டர் ரமேஷ் குமார், ``கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு விவசாயப் படிப்பிலும் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. கவிதா கடினமான உழைப்பாளி. அதனால்தான் அவருக்கு அப்படிப்பட்டதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இனி கவிதாவின் வழியை மற்ற மாணவர்களும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன்'' என்றிருக்கிறார். 

கடைசியாக ஒரு தகவல், கவிதா படித்துக்கொண்டிருக்கிற 'லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக'த்தில் விவசாய மாணவர்களின் பிராக்டிகல் வகுப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் 1000 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். கல்வி நிறுவனங்களில் முறையான கட்டமைப்புகள் இருந்தால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்பதுதான், கவிதா ஃபாமனின் வெற்றி நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் பாடம்.