வரி ஏய்ப்பு செய்தால் இனி வங்கிக் கணக்கில் பணம் இருக்காது... வருமான வரித் துறை அதிரடி! | Taxmen use rare law to collect dues directly from bank accounts of evaders

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (05/04/2019)

கடைசி தொடர்பு:16:08 (05/04/2019)

வரி ஏய்ப்பு செய்தால் இனி வங்கிக் கணக்கில் பணம் இருக்காது... வருமான வரித் துறை அதிரடி!

ரி ஏய்ப்பாளர்கள் மற்றும் வரி பாக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து இனி நேரடியாகவே அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் முறையைப் பின்பற்ற வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வருமான வரித் துறை

2018-19-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி வசூலாக வேண்டும். ஆனால், மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி மத்திய நேரடி வரி வசூல் 10.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 2017-18-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரித் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 12.5 சதவிகிதம் அதிகம் என்றாலும், எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை. 

வரி வசூலை அதிகரிக்க அறிவுறுத்தல்

எனவே, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வரி வசூலைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தி, வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.

இதையடுத்து வருமான வரித் துறை அதிகாரிகள், வரி வசூல் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளதோடு, பாக்கி வரியை வசூலிப்பதிலும் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இருப்பினும், நடப்பாண்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி வசூல் தொகையில் சுமார் 60,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி முறை போன்ற குழப்பங்களால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து அரசுக்குக் கிடைக்கும் வரி வசூல் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மேலும், அந்த நிறுவனங்கள் இன்னமும் மேற்கூறிய பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதால், வரி வசூல் விஷயத்தில் அவர்களிடம் சற்று மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, நேரடி வரித் துறையான வருமான வரித் துறைக்கு அதிக வரி வசூல் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

வரி பாக்கியை வசூலிக்க அதிரடி திட்டம்

இதனால், வரி ஏய்ப்பாளர்கள் மற்றும் வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதாவது இதற்கென்றே சட்டத்தில் இருக்கும் சிறப்புப் பிரிவைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவே பணத்தை எடுத்துக்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை இந்தச் சிறப்பு சட்டப் பிரிவை வருமான வரித் துறை அதிகாரிகள் மிகக் குறைவாகவே பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், வரி வசூல் இலக்கைப் பூர்த்தி செய்ய வேண்டிய அழுத்தம் காரணமாக வேண்டுமென்ற வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களிடம் அதை முழு வீச்சில் பயன்படுத்திக் கொள்ள, மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை மனதில் கொண்டே வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ்களையும், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கும் கடிதங்களையும் வருமான வரித் துறை அனுப்பி உள்ளது. பொதுவாக வருமான வரித் துறை அதிகாரிகள், வரி பாக்கியை வசூலிக்க இரண்டு முறைகளைப் பின்பற்றுவார்கள். ஒன்று, வங்கிக் கணக்கை முடக்கி, வர வேண்டிய வரி பாக்கியை வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வார்கள். மற்றொன்று, வரி பாக்கி வைத்துள்ளவர்களிடமிருந்தே நேரடியாக வசூலித்துக் கொள்வார்கள். 

வங்கிக் கணக்கு

இந்த நிலையில், தற்போது வருமான வரித் துறை அனுப்பி உள்ள கடிதங்களைத் தொடர்ந்து, வரி ஏய்ப்பு செய்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து அவர்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை வங்கிகளே பிடித்தம் செய்து, அதை வருமான வரித் துறையின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

``பொதுவாக இதுபோன்று வரி ஏய்ப்பாளர்களின் வங்கிக் கணக்கை முடக்குவது அல்லது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக வரித் தொகையை வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை வருமான வரித் துறை எப்போது எடுக்குமென்றால், வரிச் செலுத்துபவர், தான் செலுத்த வேண்டிய வரித் தொகை தொடர்பாக வருமான வரித் துறை அனுப்பும் நோட்டீஸை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் போனாலோ அல்லது மேல் முறையீட்டுக்கு முன்னதாக, செலுத்த வேண்டிய வரித் தொகையில் 20 சதவிகிதத்தை டெபாசிட் செய்யாமல் போனாலோதான் எடுக்கும்" என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

பெரும்பாலும், வரி பாக்கி அல்லது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித் துறை, சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்புவதும், வங்கிகளுக்குக் கடிதம் அனுப்புவதும், அது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டு, விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்வதும்தான் இதுநாள் வரையிலான நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு வருமான வரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வரி பாக்கிக்காக அவர்கள் கணக்கிலிருந்து பணத்தைப் பிடித்தம் செய்து வருமான வரித் துறை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கடிதம் எழுதப்படுவது இதுவே முதன்முறை. 

அலறிய சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள்

இந்த முறையில் பணம் கையகப்படுத்தப்படும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் மதிப்பு கெடும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் இனி வரி ஏய்ப்பு செய்வது அல்லது வரி பாக்கியைச் செலுத்தாமல் இருப்பது குறையும் என்பதோடு, வரி வசூலும் எதிர்பார்த்த இலக்கை எட்டும் என்பதாலேயே வருமான வரித் துறை இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

வரிக் கணக்கு

இதன் காரணமாகத்தான் அண்மையில் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை உடையவர்களின் வரவு செலவு கணக்குகளைக் கவனித்து வரும் ஆடிட்டர்கள் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் (தணிக்கையாளர்கள்) அமைப்புகள், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. 

அதில், ``வரி வசூல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம், கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பது பரவலாக பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அநாவசியமான அல்லது தேவையற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும், களத்தில் பணியாற்றும்  அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்