35 பில்லியன் டாலர்கள் ஜீவனாம்சம்! - விவாகரத்தில் வரலாறு படைத்த அமேஸான் அதிபர் ஜெஃப் பெசோஸ் | Jeff Bezos, wife reach biggest divorce deal

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (05/04/2019)

கடைசி தொடர்பு:20:42 (05/04/2019)

35 பில்லியன் டாலர்கள் ஜீவனாம்சம்! - விவாகரத்தில் வரலாறு படைத்த அமேஸான் அதிபர் ஜெஃப் பெசோஸ்

உலகின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேஸானின் தலைவர் ஜெஃப் பெசோஸ் (வயது 55) அவரது மனைவி மெக்கென்ஸி (வயது 48) இடையேயான விவாகரத்து உறுதியானது. இந்த விவாகரத்தின்மூலம் கைமாறும் பிரமாண்ட ஜீவனாம்சத் தொகை, வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

ஜெஃப் பெசோஸ்

தங்களது விவாகரத்துகுறித்து இருவருமே சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார்கள். மெக்கன்ஸியின் பதிவில், இந்த விவாகரத்து ஒப்பந்தப்படி, தன்வசமுள்ள அமேஸான் நிறுவனத்திற்குச் சொந்தமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிக்கை மற்றும் விண்வெளி ஆய்வு மையமான ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களின் பங்குகளை முழுமையாகத் திருப்பியளிப்பதாகவும், அமேசான் நிறுவனத்திலுள்ள தனது பங்குகளில் 75 சதவிகிதத்தை திருப்பியளிப்பதோடு, மீதமுள்ள பங்குகளுக்கான வாக்களிக்கும் உரிமையையும் விட்டுக்கொடுப்பதாகக் கூறியுள்ளார். 

ஜெஃப் பெசோஸ்

மெக்கன்ஸியின் வசமிருந்த 16.3% அமேஸான் நிறுவனப் பங்குகளில் 75% பங்குகளைத் திருப்பியளித்ததுபோக, 4% பங்குகள் ஜீவனாம்சத் தொகையாக உள்ளன. அவற்றின் சந்தை மதிப்பு 35.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது, உலகின் மிக அதிகமான ஜீவனாம்சத் தொகையாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதன்மூலம் மெக்கன்ஸி, உலகின் மூன்றாவது பணக்காரப் பெண்ணாக இடம்பிடித்துள்ளார். ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் ஒன் பணக்காரராகத் தொடர்ந்து உள்ளார். 1993ல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். 25 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின், கடந்த ஜனவரி மாதத்தில் தங்களது விவாகரத்தை அறிவித்து, தற்போது முறைப்படி பிரிந்துள்ளார்கள்.

ஜெஃப் பெசோஸ்

இந்த விவாகரத்துகுறித்து ஜெஃப் பெசோஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மெக்கன்ஸியுடனான வாழ்க்கை மிகவும் நன்முறையில் இருந்ததாகவும், அவரது திறமை தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் புகழ்ந்துதள்ளியுள்ளார். ஒரு மனைவியாக, கூட்டாளியாக, அம்மாவாக அவரது பணி சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.