சொகுசுக் கார்...கூலிங் கிளாஸ்! - ஹேம மாலினியின் ஆடம்பர தேர்தல் பிரசாரம் | BJP Candidate Hema Malini's SUV Sunroof Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 22:04 (05/04/2019)

கடைசி தொடர்பு:22:04 (05/04/2019)

சொகுசுக் கார்...கூலிங் கிளாஸ்! - ஹேம மாலினியின் ஆடம்பர தேர்தல் பிரசாரம்

 நாடாளுமன்றத் தேர்தல், வரும் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தீவிர வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பா.ஜ.க சார்பில் மதுரா தொகுதியில் பிரபல நடிகையும் தற்போதைய எம்.பி-யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். அங்கு, வாக்கு சேகரிப்புக்காக களத்தில் குதித்துள்ள  ஹேம மாலினி, மிகவும் பந்தாவாக அந்தத்  தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக, மெர்சிடஸ் பென்ஸ் காரை பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்.

ஹெம மாலினி - பா.ஜ.க

காரில் இருந்து தலை மட்டும் வெளியில் தெரியும் வகையில், அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஹேமமாலினி முன்பாகவும், கார் கதவிற்குப் பின்புறம் இருந்தும்  அவர் வெயில் படாத வகையில் , பணியாட்கள் குடைபிடிக்க, கூலிங் கிளாஸுடன் தொகுதியில் வலம்வருகிறார். அவருடைய ஆடம்பர பிரசார நடவடிக்கையை மதுரா மக்கள் பரவலாக பேசத் தொடங்கியுள்ளனர். அதோடு, அவருடைய புகைப்படங்கள் பகிரபட்டு, சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

 

இதனிடையே, கோவர்தனில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்த ஹேமமாலினியைக் கலாய்த்து,  காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர்  அப்துல்லா தமது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். இதனால், மேலும் ஹேம மாலினியின் பிரசார முறை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ராஷ்ட்ரிய லோக்தல் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தியவர், ஹேமமாலினி.