``கடன் வாங்கி டெல்லிக்குச் சென்றேன்"!- ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற முதல் கேரள பழங்குடி பெண் ஶ்ரீதன்யா | Sreedhanya Suresh becomes 1st tribal woman from Kerala to crack civil service exams

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:14:43 (06/04/2019)

``கடன் வாங்கி டெல்லிக்குச் சென்றேன்"!- ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற முதல் கேரள பழங்குடி பெண் ஶ்ரீதன்யா

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு நடுவிலும், ராகுல் காந்தியும், பினராயி விஜயனும் ஶ்ரீதன்யா சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். ஶ்ரீதன்யாவின் வெற்றி மிக முக்கியமான வெற்றி. அவரது வெற்றி பலருக்கும் உந்துசக்தியாக இருக்கும் என உச்சி மோந்து கொண்டாடியிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ``அர்ப்பணிப்பும், கடின உழைப்பும்தான் ஶ்ரீதன்யாவின் கனவை நிஜமாக்கியுள்ளது' என மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் ராகுல் காந்தி. இப்படி எல்லோரும் கொண்டாடும் அளவுக்கு என்ன செய்தார் இவர் என ஶ்ரீதன்யாவின் பெயரை கூகுளில் தேடியவர்களுக்கு ஶ்ரீதன்யாவின் தன்னம்பிக்கை கதை தெரிந்திருக்கும்.  

ஶ்ரீதன்யா

PC: Manorama

நேற்று வெளியான யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவில் வென்றவர்கள் பட்டியலில் ஶ்ரீதன்யா சுரேஷ் என்ற பெயரும் இடம்பெற்றிருந்தது. கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த அவர் அகில இந்திய அளவில் 410-வது ரேங்க்கைப் பெற்றிருக்கிறார். அவரது வெற்றிச் செய்தியைக் கேட்ட அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கண்கலங்கி, ஆரத்தழுவி ஶ்ரீதன்யாவைப் பாராட்டியுள்ளனர். கேரளாவின் பழங்குடி சமூகத்திலிருந்து முதல்முறையாக ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றிருக்கிறார் என்பது பலருக்குமான முன்னுதாரணம். 

ஶ்ரீதன்யா

26 வயதான ஶ்ரீதன்யா கேரளாவின் வயநாட்டின் குருச்யா என்ற பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர். இடியமாவயல் கிராமத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் சுரேஷ் மற்றும் கமலா தினக்கூலிகள். மிகவும் பொருளாதாரச் சிக்கலில் தவித்த குடும்பப் பின்னணி காரணமாகத் தினமும் செய்தித்தாள்கூட வாங்க முடியாத சூழலில்தான் ஶ்ரீதன்யா படித்திருக்கிறார். அவர் ஐ.ஏ.எஸ் நேர்காணலுக்காக டெல்லி செல்வதற்குக்கூட அவரிடத்தில் பணம் இல்லை. தன் நண்பர்கள் பலரிடம் கடனாகப் பெற்ற 40,000 ரூபாயைக் கொண்டுதான் டெல்லி சென்று நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வென்றிருக்கிறார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வசித்தபோதிலும், ஐ.ஏ.எஸ் தேர்வுவரை சென்று அதில் வெற்றியும் பெற்ற முதல் நபர் ஶ்ரீதன்யா சுரேஷ்தான். `` கேரளாவின் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவள் நான். எங்கள் பகுதியில் நிறைய பின்தங்கிய, பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், முதன்முதலாக நான்தான் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றிருக்கிறேன். என்னுடைய வெற்றி இன்னும் பலருக்கும் உந்து சக்தியாக இருக்கும்" என நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஶ்ரீதன்யா சுரேஷ்.