`அவள் கொடுத்த ஊக்கம்தான் இந்த இடத்தில் என்னை நிறுத்தியிருக்கு!' - யுபிஎஸ்சி தேர்வில் நம்பர்ஒன் இளைஞரின் க்யூட் பேச்சு | UPSC topper Kanishak Katariya  Thanks His Girlfriend For His Success

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:41 (06/04/2019)

`அவள் கொடுத்த ஊக்கம்தான் இந்த இடத்தில் என்னை நிறுத்தியிருக்கு!' - யுபிஎஸ்சி தேர்வில் நம்பர்ஒன் இளைஞரின் க்யூட் பேச்சு

பொதுவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, `என் அம்மா, அப்பா, குடும்பம், நண்பர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால், இம்முறை யுபிஎஸ்சி தேர்வில் முதல் இடம் பிடித்த இளைஞரோ, தன் காதலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Kanishak Kataria

ஐஏஎஸ், ஐபிஎஸ்,  ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 வகையான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி.) கடந்த ஜூன் மாதம் நடத்தியது. அத்தேர்வுகளின் இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. இத்தேர்வில், 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 577 ஆண்கள்; 182 பேர் பெண்கள். மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலைச் சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பி.இ. பட்டதாரி பெண், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தவிர, தமிழகத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியளவில் யுபிஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள கனிஷாக் கட்டாரியா ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவரது தந்தையும் ஐஏஎஸ் அதிகாரி. 2010 ம் ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வான IIT-JEE தேர்வில் பட்டியலினத்தவர் பிரிவில் முதலிடம் பிடித்தவர். 2014 ம் ஆண்டு மும்பை ஐஐடி-யில் பட்டம் பெற்ற கனிஷாக், தென் கொரியாவில் சாம்சங் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் பிறகு 2017 ம் ஆண்டு வேலையை ராஜிநாமா செய்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார். தற்போது தேர்வில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

Kanishak Kataria

யுபிஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கனிஷாக் கட்டாரியா, ``நான் தென் கொரியாவிலும் வேலை பார்த்தேன். பெங்களூரிலும் வேலை செய்தேன். இரண்டு இடங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நான் உணர்ந்தேன். பெங்களூரை காட்டிலும் தென் கொரியாவில் அடிப்படை வசதிகள் தரமாக இருந்தது. இந்தியாவில் ஒரு நகரத்திலேயே இவ்வளவு குறைபாடுகள் என்றால் கிராமப்புறங்களின் நிலைமை? எனவே, இந்தச் சமூகத்தின் வளர்ச்சியில் நான் பங்களிக்க விரும்பினேன். அதனால் பொறியியல் துறை வேலையை ராஜிநாமா செய்தேன். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால், இந்தியளவில் முதல் இடம் பிடித்த செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது. இந்தத் தருணத்தில் என் அம்மா, அப்பா, சகோதரி, என் காதலி அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கமும், நம்பிக்கையும்தான் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. மக்களுக்கு நல்ல ஆட்சியராக நான் இருப்பேன் என்று நம்பிக்கையளிக்கிறேன்’’ என்றார்.

கனிஷாக் பக்கம் பக்கமாகப் பேசிய எல்லாவற்றையும் கவனிக்காமல், காதலிக்கு நன்றி சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ். `எவ்வளவு தன்மையாக வெளிப்படையாக தான் காதலிக்கும் பெண்ணுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்’ என்று பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க