யுகாதிக்கு ஏன் பானகம் கொடுக்கிறார்கள் தெரியுமா? | How to prepare summer healthy drink Panagam

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:45 (06/04/2019)

யுகாதிக்கு ஏன் பானகம் கொடுக்கிறார்கள் தெரியுமா?

ண்டிகைகளின்போது செய்யப்படும் உணவுகளின் சுவை மட்டுமே நாம் அறிந்தவை. அதன் பின்னணியில் இருக்கிற மருத்துவக் காரணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது, நம் முன்னோர்களை நினைத்து பெருமிதப்படாமல் இருக்க முடியாது. அப்படி பெருமிதப்படவேண்டிய ஒரு பண்டிகை டிரிங்க் தான் பானகம். வெயில் காலங்களில் வரும் அத்தனை  கோயில் திருவிழாக்களிலும் பானகம் வழங்கப்படும். தவிர, ராம நவமி, யுகாதி பண்டிகையான இன்றும்கூட  ((6-4-19) பானகம் முக்கியமான ஒரு பண்டிகை ரெசிபிதான். இதை எப்படிச்  செய்வது, அதன் பலன் என்ன? சமையற்கலை நிபுணர் அன்னம் சொல்கிறார். 

பானகம்

''வெயில் காலத்தில் அதிகம் வியர்க்கும் என்பதால், உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். அதை இந்தப்  பானகம் ஈடுகட்டிவிடும். திருவிழாக்களில் பானகம் வழங்குவதன் காரணம் இதுதான். 4 கப்  தண்ணீரில் ஒரு கப்  வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இதனுடன் நசுக்கிய இரண்டு ஏலக்காய், இரண்டு சிட்டிகை வேப்பம் பூ சேர்த்துக்கொள்ளுங்கள். வேப்பம் பூவின் கசப்பு இதற்குள் இறங்க, சிறிது நேரம் அப்படியே வையுங்கள். பிறகு, ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, கரண்டியால் நன்றாகக் கலக்கினால், பானகம் ரெடி. அடுப்பில் வைக்கவேண்டியதில்லை. வெல்லத்தில் இருக்கிற இரும்புச்சத்து, எலுமிச்சையில் இருக்கிற விட்டமின்  'சி', வயிற்றில் இருக்கிற பூச்சிகளைக் கொல்கிற வேப்பம் பூ  இந்த மூன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நல்லது.''