`பிரியங்கா என் ஷூ-வை எடுத்துக்கொண்டு வந்தார்!' - இடதுசாரி பத்திரிகையாளர் உருக்கம் | priyanka took my shoe and given to me' says kerala journalist

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (06/04/2019)

கடைசி தொடர்பு:16:53 (06/04/2019)

`பிரியங்கா என் ஷூ-வை எடுத்துக்கொண்டு வந்தார்!' - இடதுசாரி பத்திரிகையாளர் உருக்கம்

கேரளாவின் வயநாட்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி வயநாட்டுக்கு வியாழக்கிழமை வந்தார். பிரியங்கா காந்தியும் உடன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு கல்பட்டா பகுதியில் ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார். ராகுல் காந்தி வாகனத்துக்கு முன்னால் மற்றொரு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலர்,  மேலிருந்து  கீழே விழுந்தனர். இதைப் பார்த்த ராகுல் காந்தியும் பிரியங்காவும், உடனடியாகத் தங்கள் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று, பத்திரிகையாளர்களுக்கு உதவினார். பத்திரிகையாளர்களுக்கு ராகுல் காந்தி உதவிய புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இந்தச் சம்பவம் திட்டமிட்ட செயல், பப்ளிசிட்டிக்காகச் செய்யப்பட்ட விஷயம் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். 

கையில் ஷூ-வுடன் பிரியங்கா

இந்நிலையில், காயமடைந்த பத்திரிகையாளர் ரிக்ஸன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், பிரியங்கா காந்தி தன் செருப்பை எடுத்துக் கொடுத்ததாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், '' நாங்கள் சென்ற வாகனத்தில் 20 பத்திரிகையாளர்கள் இருந்தோம். காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் வாகனத்தில் ஏறியதால், உள்ளே நெரிசல் ஏற்பட்டுக் கீழே விழுந்தோம். இதைப் பார்த்ததும் ராகுல் காந்தியும் பிரியங்காவும், கீழே இறங்கி எங்களிடத்தில் ஓடி வந்தனர். என்னை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். நான் அணிந்திருந்த ஷூ கழன்றுவிழுந்துவிட்டது. பிரியங்கா அந்த ஷூவை கையில் எடுத்து ஆம்புலன்ஸில் இருந்த என்னிடத்தில் தந்தார். என்னால், அதை நம்பவே முடியவில்லை. 

என் கல்லூரிக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினேன். சோனியா காந்தி, ராகுல் காந்தியை எதிர்த்துக் கோஷமிட்டுள்ளேன். ஆனால், நேரில் அவர்களின் மனிதநேயத்தைக் கண்டு அசந்துபோனேன். எங்களை மருத்துவமனையில் அனுமதித்த பிறகும்,  ராகுல் காந்தி தொடர்புகொண்டு, உடல்நலம் குறித்து விசாரித்தார். உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் பேசினர். இடதுசாரி சிந்தனை உடையவனாக இருந்தாலும், ராகுலின் மனிதாபிமானம் என்னை அவரிடத்தில் ஈர்க்கவைத்துள்ளது. ராகுல் பிரதமர் ஆக வேண்டுமென்று என் மனம் விரும்புகிறது. நிச்சயமாக பப்ளிசிட்டிக்காக இதை அவர்கள் செய்யவில்லை. இயற்கையாகவே உதவும் குணம் அவர்களிடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன் '' என்று உருகியுள்ளார்.

பிரியங்கா , ராகுல் பத்திரிகையாளர்களுக்கு உதவி

வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு ஒரு எமோஷனல் காரணமும் உள்ளது. கடந்த 1991- ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்தியாவின் பல நதிகளில் அவரின் அஸ்தி கரைக்கப்பட்டது. வயநாட்டில் திருநெல்லி அருகே  ஓடும் பாபநாசினி நதியிலும் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணியுடன் வந்த ராகுல் காந்தி, பாபநாசினி நதியில் தந்தையின் அஸ்தியைக் கரைத்துவிட்டு நதிக் கரையில் உள்ள கோயிலில் வழிபட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க