`மாற்றத்துக்கு சமூக இயக்கங்களின் பங்கு மட்டும் போதாது!' - ஆந்திரா தேர்தலில் போட்டியிடும் ரோஹித் வெமூலாவின் நண்பர் | Vijaykumar, a friend and phd company of rohith vemula to contest from parchur assembly constituency of andhrapradesh

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:18:30 (06/04/2019)

`மாற்றத்துக்கு சமூக இயக்கங்களின் பங்கு மட்டும் போதாது!' - ஆந்திரா தேர்தலில் போட்டியிடும் ரோஹித் வெமூலாவின் நண்பர்

ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமூலாவை உங்களுக்கு நினைவிருக்கலாம். ரோஹித் உட்பட இன்னும் இரண்டு மூன்று மாணவர்கள் தாங்கள் பல்கலைக்கழகத்தில் சாதிய ஒடுக்குமுறையைச் சந்திப்பதாகப் புகார் எழுப்பினார்கள்.

விஜய்குமார் பெடப்புடிதேர்தல்

ரோஹித் மரணமடைந்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. தற்போது ரோஹித்தின் நண்பரும், ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவருமான விஜயக்குமார் ஆந்திர சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்களிடம் நிதி திரட்டும் அவர், ``சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த  சமூக இயக்கங்களின் பங்கு மட்டும் போதாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நான் அரசியலில் நேரடியாகக் களமிறங்கக் காரணம் இதுதான். நாம் அச்சமும் சகிப்பின்மையும் அற்ற காலத்தில் வாழ்கிறோம். உணவு உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

வாழ்வு உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்கள் நெரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்காகக் குரல் எழுப்பும் செயற்பாட்டாளர்களும் கொல்லப்படுகிறார்கள். ரோஹித் வெமூலா, நான் உட்பட ஐவரும் பல்கலைக்கழகத்தின் துன்புறுத்தலால் ஆற்றுப்படுத்தமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டோம். தினக்கூலிகளின் குடும்பத்தில் பிறந்தாலும் எனது கல்வியில் நான் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை. ஆனால், எனது கல்வி வழியாக எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சமூக மாற்றம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அரசியலில் நுழைவதால் ஒரேயடியாக இது அத்தனையும் மாறிவிடாது. ஆனால், இது வழியாகவேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நான் தக்குபத்தி வெங்கடேஸ்வரராவ் என்பவரையும் சாம்பசிவராவ் என்பவரையும் எதிர்த்து ஆந்திராவின் பர்ச்சூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இதில் வெங்கடேஸ்வரராவ் கரம்சேது தலித் படுகொலைச் சம்பவத்தில் முதன்மையானவராகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரீஸ்வரியின் கணவர். இந்த இரண்டு வேட்பாளர்களும் பணபலம் மிக்கவர்கள் என்பதால் இவர்களை எதிர்க்க எனக்குக் குறைந்த அளவு பொருளாதார பலம் தேவைப்படுகிறது. அதற்காக மக்களிடமே உதவி கேட்கிறேன்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க