தமிழக வாக்காளர்களே... இந்தத் தவறு இன்னொரு முறை நடந்துவிடக்கூடாது! | Think before you vote regarding the environmental issues in India

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (07/04/2019)

கடைசி தொடர்பு:17:25 (07/04/2019)

தமிழக வாக்காளர்களே... இந்தத் தவறு இன்னொரு முறை நடந்துவிடக்கூடாது!

இருபதாம் நூற்றாண்டுத் தேர்தல்களைவிட, இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நடந்த தேர்தல்களைவிட, தற்போது நடக்கப்போகும் தேர்தல் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

தமிழக வாக்காளர்களே... இந்தத் தவறு இன்னொரு முறை நடந்துவிடக்கூடாது!

ன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல். ஒவ்வொரு கட்சியும் தன் பிரசார பீரங்கிகளைத் தெருவுக்குத் தெரு தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில், தாங்கள் எதையெல்லாம் செய்வோமென்று முழக்கமிடக் கட்சிகளுக்கு இருக்கும் கால அவகாசம்கூட, எதையெல்லாம் கருத்தில்கொண்டு இந்தத் தேர்தல் மக்களால் எதிர்கொள்ளப்பட வேண்டுமென்று சொல்ல சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்களுக்கு இல்லை. ஓட்டுப் போடுவதற்குமுன் நாம் இதுவரை கடந்துவந்த பாதையில் அனுபவித்த சூழலியல் சீர்கேடுகள் பற்றி முழுமையாகத் திரும்பிப் பார்க்கவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டுத் தேர்தல்களைவிட, இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் நடந்த தேர்தல்களைவிட, தற்போது நடக்கப்போகும் தேர்தல் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. அதற்குப் பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் சூழலியல் விழிப்புணர்வையும் தன் மண்ணையும் காற்றையும் சுத்தமான நீரையும் காக்க வேண்டுமென்ற அக்கறையையும்கூடக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற பெரும்பாலான மக்கள் போராட்டங்கள் சூழலியல் சார்ந்ததே. ஆகவே, நம் ஆயுதமான ஓட்டு யாருக்கு விழவேண்டுமென்ற முடிவை எடுப்பதற்குமுன் சூழலியல் சார்ந்த பல விஷயங்களைக் கருத்தில் எடுக்கவேண்டியுள்ளது. காற்று, தண்ணீர், நில மாசுபாடு, காலநிலை மாற்றப் பாதிப்புகள் என்று பல சூழலியல் பிரச்னைகளை நாடு எதிர்கொண்டுவரும் இந்தச் சூழலில் இந்தத் தேர்தல் சூழலியல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படியிருந்தும், தம் தேர்தல் அறிக்கைகளில் ஒருசில கட்சிகளைத்தவிர வேறெதுவும் சூழலியல் குறித்துப் பேசாதது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையுமே விளைவிக்கிறது.

தேர்தல், ஓட்டு, தண்ணீர் மாசுபாடு

கட்சிகள் சூழலியல் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், மக்கள் தேர்தல் நாளை எதிர்கொள்வதற்குமுன் பல நாள்களாகவே அவற்றைத்தான் அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர்ப் பிரச்னை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சுத்தமான காற்றும் குடிநீரும் கேள்விக்குறியாகி நிற்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்தச் சூழலில் இவற்றைத் தவிர வேறு எதை நகரவாசிகள் முதன்மையாகக் கருதுவார்கள். தம் மக்கள் வாழ்வதற்குச் சுகாதாரமான வாழிடத்தை, சுத்தமான குடிநீரைக் கொடுக்கத் தவறிவிட்டன முந்தைய ஆட்சிகள். தற்போது சுத்தமான என்பதைவிடக் குடிநீர் கிடைப்பதே பல பகுதிகளில் கேள்விக்குறியாகி நிற்கிறது. வளர்ச்சித் திட்டங்களால் நாட்டின் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில் தம் சந்ததிகளுக்குத் தேவையான தரமான வாழிடத்தைத் தவிர கிராமப்புற மக்கள் வேறெதை முதன்மையாகக் கருதுவார்கள். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சூழலியல் சீர்கேடுகளும் பிரச்னைகளும் இந்திய நகரங்களைத் தொற்று நோய்போல் அரித்துக்கொண்டிருக்கின்றன. இது நாடு முழுக்க வாழும் நகரவாசிகளின் வேண்டுகோள்களில் நீராதார மேம்படுத்துதல்களையும், சுவாசிக்க சுத்தமான காற்றையும் முதலிடத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. அவை தேர்தல் மீதான மக்களின் பார்வைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தீவிரவாதம், உறுதியான தற்காப்பு மற்றும் ராணுவ மேலாண்மையையும் தாண்டி மக்களின் உடல் ஆரோக்கியம், தண்ணீர்ப் பற்றாக்குறை, ஏழ்மை, வளர்ச்சிக்காகச் சுரண்டப்படும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரங்கள், நகர்ப்புறக் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சூழலியல்ரீதியாக நடக்கும் பேரவலங்கள் போன்றவை தேர்தல் வாக்குறுதிகளில் முதலிடம் வகிக்கவேண்டும். தேர்தல் நாளன்று மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதிலும் அவை முதலிடம் வகிக்கவேண்டும். அதிலும் தண்ணீர்ப் பிரச்னை அனைத்துத் தட்டு மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் மட்டுமன்றி நகர்ப்புற, கிராமப்புற, புறநகர்ப் பகுதிகள் நீரின்றி வாடிய சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் கணக்கிலடங்காதவை. தற்சமயம், இந்தியாவில் சுமார் 163 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் துன்பப்பட்டு வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாகக் குடிக்கவே நீரில்லாமல் தவித்த கிராமங்களும் உள்ளன. இந்நிலையில் நீருக்கு இந்தத் தேர்தலில் பெரும்பங்குண்டு என்பதில் சந்தேகமேயில்லை. 

அந்தத் தவறு மீண்டும் நடந்துவிடக்கூடாது மக்களே

543 தொகுதிகளில் 300 தொகுதிகள் கிராமப்புறங்களை அதிகம்கொண்ட பகுதிகளில்தாம் அமைந்துள்ளன. நகரங்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்ய சுரண்டப்பட்ட கிராமங்கள் அந்த வடுக்களை அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவைபோகத் தேர்தலைச் சந்திக்கும் முன்னர் ஆற்றுமணல் சுரண்டல்கள், குவாரிகள், சுரங்கச் சுரண்டல்கள், தொழிற்சாலைகளால் நதிகள் மற்றும் ஏரிகளில் நடக்கும் மாசுபாடுகள் என்று பல்வேறு பிரச்னைகளை மக்கள் மனதில் நிறுத்தவேண்டும்.

நகர்ப்புறச் சூழலியல் பிரச்னைகள் ஏராளமான சமுதாயச் சிக்கல்களுக்கு வழிவகுத்து வருகின்றன. குறிப்பிட்ட தட்டு மக்களுக்குச் சுகாதாரமான வாழ்வியல் ஏற்படுவதற்காகப் பெருவாரியான மக்கள்தொகை நகர்ப்புறத்திலும் புறநகர்ப்பகுதிகளிலும் பல்வேறு சீர்கேடுகளுக்கு ஆளாகிவருகின்றனர். தமிழகத்தின் தலைநகரத்திலுள்ள வடசென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுமே அதற்கான ஆகச்சிறந்த உதாரணம். பாராளுமன்றத் தொகுதிகளில் 200 தொகுதிகள் நகர்ப்புறங்களை அதிகமாகக் கொண்ட பகுதிகள். நகரங்களில் நாம் கழிவுகளை உற்பத்தி செய்கிறோம், அந்தக் கழிவுகள் எங்கே செல்கிறதென்பதை மறந்துவிடுகிறோம். இது எதிர்காலத்தில் நம் கழிவுகளில் நம்மையே மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கும். அத்தகைய மோசமான கழிவு மேலாண்மைதான் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கரணை போன்ற நீராதாரங்கள் விஷமாகிவிட்டன. இன்னும் இத்தகைய எத்தனையோ நில அமைப்புகள் தன் இயல்பிழந்து அழிந்துகொண்டிருக்கின்றன. அவற்றால் இயல்பு வாழ்க்கையை இழந்து பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தேர்தலுக்குமுன் நாம் நினைவில் நிறுத்தவேண்டும். பொது நிலங்களில் நீர்நிலைகளில் நடக்கும் தனியார் வளச்சுரண்டல்கள் மக்களின் பொதுப்பயன்பாட்டில் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

அந்தத் தவறு மீண்டும் நடந்துவிடக்கூடாது வாக்காளர்களே!

விவசாயம் பல பிரச்னைகளைச் சந்தித்துவிட்டது. இந்தியாவின் விவசாயத் துறையில் தண்ணீர் தேவை எப்போதும் ஒரு முக்கியப் பிரச்னையாகவே இருந்துவருகிறது. விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களைச் சரிசெய்யும் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களும், கடன்வசதிகளும், உற்பத்தி செய்பவனுக்கே அதன் லாபம் கிடைக்கும் வகையிலான திட்டங்களும், போதிய மானியங்களும் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் மத்தியிலிருக்க வேண்டும். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக முக்கியமான ஒன்றுண்டு. பொருளாதார வளர்ச்சிக்கும் சூழலியல் பாதுகாப்புக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்துவருகிறது. அதைப் பூர்த்திசெய்யக்கூடிய சூழலியல் ஒத்திசைவான பொருளாதாரத் திட்டத்தை யார் முன்வைக்கிறார்களோ அவர்களின் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கவே மக்கள் முனையவேண்டும். அதுவே மக்களின் வாழ்வாதாரத்தை, வாழ்வியலைத் தரமுயர்த்தும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களே நாட்டில் ஏற்படும் சூழலியல் பிரச்னைகளால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தேர்தல் மற்றும் அதில் நாம் செலுத்தும் ஓட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து சமுதாயத்திலுள்ள சூழலியல் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளைப் புரிந்து செயல்பட வேண்டும்.

ஜனநாயக நாட்டில் வருகின்ற ஒவ்வொரு தேர்தலுமே ஒரு புரட்சிதான். அந்தப் புரட்சியைச் சரியான முறையில் மக்கள் கையிலெடுத்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் எத்தனையோ முறை நம் சூழலியல் குறித்து கொஞ்சமும் கவலைகொள்ளாத, கொஞ்சமும் அறியாத நபர்களை நாடாளுமன்றங்களுக்கு அனுப்பியிருக்கிறோம். அந்தத் தவறு இன்னொரு முறை மீண்டும் நடந்துவிடக்கூடாது.


டிரெண்டிங் @ விகடன்