மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி முத்ரா யோஜனா'வில் நடந்தது என்ன? பகுதி-3 | What Happened in Pradhan Mantri MUDRA Yojana?

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (06/04/2019)

கடைசி தொடர்பு:19:38 (06/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி முத்ரா யோஜனா'வில் நடந்தது என்ன? பகுதி-3

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போதுவரை முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையில் சுமார் 11,000 கோடி ரூபாய் வாராக்கடனாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மோடி சொன்னதும் நடந்ததும்: `பிரதம மந்திரி முத்ரா யோஜனா'வில் நடந்தது என்ன? பகுதி-3

த்திய பி.ஜே.பி. அரசின் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளும், அவற்றின் தற்போதைய நிலையும் என்ன என்பது பற்றி இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், `பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டம்' குறித்த செயல்பாடுகளை இந்தத் தொடரில் பார்ப்போம்...

`பிரதம மந்திரி முத்ரா யோஜனா':

நாடு முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் (MSME), அத்தகைய தொழில்களின் வளர்ச்சிக்காகவும் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டம்தான் முத்ரா யோஜனா. 

குறுந்தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதி நிறுவனம் (Micro Units Development and Refinance Agency - MUDRA) என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் நிதியைக் கொண்டு குறுந்தொழில்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களை நடத்தும் தனியாருக்குத் தேவையான நிதியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, சிசு, தருண், கிசோர் என மூன்று பிரிவுகளில் 50,000 முதல் 10 லட்சம் ரூபாய்வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்குக் கடன் வழங்கப்படுகிறது. 

மோடி சொன்னதும் நடந்ததும்

கடன்பெறுவோர் யார், யார்?

புதிதாகத் தொழில் தொடங்குவோர் அல்லது ஏற்கெனவே சிறு, குறு தொழில்களை நடத்திக் கொண்டிருப்போர் அவர்களின் தொழிலை மேம்படுத்த விரும்பும்பட்சத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி, தொழிலை விஸ்தரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதிக அளவில் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும்.

அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் சிறுதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். தொழிலுக்கான வாகனம் வாங்குதல், முடிதிருத்தும் நிலையம், பியூட்டி பார்லர் போன்றவற்றை மேம்படுத்துதல், மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் தொழிலில் உள்ளவர்கள் தங்களை கடையை விரிவுபடுத்துதல், சிற்றுண்டி உணவு கடை, காய்கறி மற்றும் பழக்கடைகள் வைத்தல், துணிக் கடைகள், பேக்கரி கடைகளை விரிவுபடுத்துதல் என அனைத்துவிதமான தொழில்களுக்கும் கடன் பெற முத்ரா திட்டம் வகைசெய்கிறது. 

கல்விக் கடன், தனிநபர் கடன், இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கான கடன்கள் முத்ரா திட்டத்தின் கீழ் வராது. முத்ரா திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனுக்கான வட்டி அதிகபட்சம் 12 சதவிகிதம்வரை இருக்கும். மாடு மற்றும் கோழிப் பண்ணைகள், காளான் வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படாது.

முத்ரா யோஜனா - உண்மை நிலவரம் என்ன?

 

பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையில் சுமார் 11,000 கோடி ரூபாய் வாராக்கடனாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கடன்களை மேலாண்மை செய்வதில் அதிக கவனம் தேவை என்றும், அவை வாராக்கடன்களாக மாற வாய்ப்புள்ளது என்றும் ரிசர்வ் வாங்கி எச்சரித்துள்ளது.

இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, போலியான ஆவணங்களைக் கொண்டு 62 லட்சம் ரூபாய் கடன் அளித்துள்ளது. அதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இதேபோன்று வெளிவராத வழக்குகள் இன்னும் எத்தனையோ உள்ளன.

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறுவோர், வங்கியில் இதரவகை கடன் பெறுபவர்களைப் போன்று எந்தவோர் உத்தரவாதமும் அளிக்கத் தேவையில்லை.  வங்கியின் வழக்கமான எந்தவொரு விதிமுறைகளும் இந்தத் திட்டத்திற்குப் பொருந்தாது. குறிப்பாக, முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்துறையில் பெண்கள் முன்னேற வேண்டும்; அவர்கள் சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்தக் கடன் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால், நடைமுறையில் நடப்பதோ வேறு. குறிப்பிட்ட தொகை மற்றும் எண்ணிக்கையிலானோருக்குக் கடன் வழங்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளதால் உடனடியாக அந்தத் தொகையை கடனாக வழங்க வேண்டிய சூழல் வங்கிகளுக்கு ஏற்படுகிறது. இந்தத் திட்டத்தில் உள்ள ஒருசில குறைகளை அரசு சரி செய்யவில்லை என்றால் பெரும்பாலான வங்கிகள், வாராக்கடன் தொகையை அதிகளவு எதிர்கொள்ள நேரிடும். 

முத்ரா யோஜனா கடன் வழங்குதல் குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் முத்ரா கடன் நோடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அரசின் இந்தத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழில் திட்டங்களை வைத்திருப்பவர்கள், பணம் இல்லாததால்தொழில் தொடங்க முடியாதவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். 

கடன் கேட்டு வருபவர்களின் தொழில் திட்டங்கள், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. ஒரு சிலர் எங்களிடமே `ஏதாவது தொழில் தொடங்க யோசனை தாருங்கள்' என்று கூறுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றால் அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை என்பதே பலரின் எண்ண ஓட்டமாக உள்ளது. 

தொழிலுக்கான மூலப்பொருள் வாங்கும் இடத்திற்கே நேரடியாகப் பணம் செலுத்தப்படும். ஆனால், அதைப் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை" என்றார். முத்ரா திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதுடன், பெறும் கடன் தொகையைச் சரியான தொழிலில் பயன்படுத்தினால் இந்தியாவில் வேலை இல்லாதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள்...

-தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்