"1000 கி.மீ தொலைவிலுள்ள செயற்கைக்கோளை தாக்கும் திறன்படைத்தது A-SAT" - டி.ஆர்.டி.ஓ தலைவர் | drdo replies to nasa about mission sakthi

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (06/04/2019)

"1000 கி.மீ தொலைவிலுள்ள செயற்கைக்கோளை தாக்கும் திறன்படைத்தது A-SAT" - டி.ஆர்.டி.ஓ தலைவர்

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்கும்பொருட்டு, எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகணை கொண்டு தகர்க்கும் திட்டத்துக்கு, 'மிஷன் சக்தி'  என்று பெயரிடப்பட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ (DRDO) ஏ-சாட் என்னும் ஏவுகணைமூலம் விண்வெளியில் செயற்கைக்கோளைத் தாக்கி அழித்தது. 

மிஷன் சக்தி

இந்நிலையில், "இந்தியா ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை நேரடியாகத் தகர்த்து சோதனை நடத்தியுள்ளது. இது மிகவும் பயங்கரமானது. அந்த ஏவுகணை தகர்த்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள், விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இந்த ஒரு நிகழ்வால், 400 பாகங்கள் குப்பைகளாக மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது" என நாசா விண்வெளி மைய நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் தனது கருத்தை காட்டமாகப் பதிவுசெய்திருந்தார். 

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் சதீஷ் ரெட்டி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளைத் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தயாரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதற்காக  100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள். பாதுகாப்புத் துறையில் விண்வெளி என்பது முக்கியத்துவம் பெற்றுவருகிறது. தற்போது, இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, இலக்கைத் தாக்கி அளிப்பதில் இந்தியாவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு முன்பே தடுப்பதுதான் சிறந்த வழியாகும். மேலும், இந்தியா செலுத்திய ஏவுகணை, பூமியில் இருந்து 1,000 கி.மீ தொலைவில் இருக்கும் செயற்கைக்கோளைக்கூட தாக்கி அழிக்கும் திறன் படைத்தது. ஆனால், 300 கி.மீ தொலைவில்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறோம். பிற நாட்டின் விண்வெளிச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கம் எப்போதுமே இந்தியாவுக்கு இருந்தது இல்லை. மேலும் இப்போது சிதறியிருக்கும் குப்பைகள் 45 நாள்களில் சிதைந்துவிடும்" என்றார்.