காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி! - 9 பேர் கைது | Congress supporters in Muzaffarnagar fight over Biryani - 9 arrested

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (07/04/2019)

கடைசி தொடர்பு:17:29 (07/04/2019)

காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பிரியாணிக்காக நடந்த அடிதடி! - 9 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியைப் பெற்றுக்கொள்வதில் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது. இதில், பலர் காயமடைந்தனர். 

பிரியாணிக்காகக் காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி

உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நசிமுதீன் சித்திக் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் அப்பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் தொண்டர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ மௌலானா ஜமீல் என்பவரின் முசாபர்நகர் இல்லத்தில் பிரியாணி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கூட்டத்தின் முடிவில் பிரியாணி வழங்கப்பட்டபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பொருள்களைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் போலீஸார் வந்து அடிதடியில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தினர். 

பிரியாணிக்காகக் காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி


தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதியின்றி தொண்டர்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறி ஜமீல் அவரது மகன் நயீம் அகமது உள்ளிட்ட 34 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தவிவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதிகாரி ராம்மோகன் ஷர்மா தெரிவித்தார். பிஜ்னோர் தொகுதியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாகக் கடந்த 2012ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஜமீல், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.