`கல்விக் கடனுக்கு ஒற்றைச்சாளர முறை; புதிய பல்கலைக்கழகங்கள்!' - ராகுல் காந்தி வாக்குறுதி | Will introduce single window system for education loan, promises congress

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:06:30 (08/04/2019)

`கல்விக் கடனுக்கு ஒற்றைச்சாளர முறை; புதிய பல்கலைக்கழகங்கள்!' - ராகுல் காந்தி வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்குக் கல்விக் கடன் ஒற்றைச்சாளர முறையில் வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுக்க புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். 

ராகுல் காந்தி

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளையும் கொடுத்து வாக்குகளைக் கவரும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்துவருகின்றனர். 

அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான வாக்குறுதிகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அதில், `காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் கல்விக் கடன் வழங்கப்படும். மாணவர்களுக்கு வேலை கிடைக்கும்வரை அல்லது சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வரை அவர்களின் கல்விக் கடனுக்காக வங்கிகள் வட்டி வசூலிக்காது. அதேபோல், மாணவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுத்து புதிய சட்டம் இயற்றப்படும். 

ராகுல் காந்தி

நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்து, கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் மாநில அரசுகளால் நடத்தப்படும் புதிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமாக காங்கிரஸ் அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.