மோடி சொன்னதும் நடந்ததும்: `ஸ்கில் இந்தியா'-வில் என்ன நடந்தது...? பகுதி - 4 | What Happen In Skill India

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:51 (08/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: `ஸ்கில் இந்தியா'-வில் என்ன நடந்தது...? பகுதி - 4

இந்தத் திட்டங்களின் பயனடைந்திருப்பவர்கள் கோடிக்கணக்கானோர் என்று மத்திய அரசு கூறினாலும், உண்மையான தகவல்களைப் பார்க்கும்போது, அவை முற்றிலும் மாறுபடுகிறது.

மோடி சொன்னதும் நடந்ததும்: `ஸ்கில் இந்தியா'-வில் என்ன நடந்தது...? பகுதி - 4

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் ``ஸ்கில் இந்தியா" என்னும் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் குறித்துக் காண்போம்...

மோடி சொன்னதும் நடந்ததும்

ஸ்கில் இந்தியா திட்டம்:

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் திறன்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், அவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 40 கோடி பேருக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் இலக்குடன் மத்திய அரசால், கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் `திறன்மிகு இந்தியா’ திட்டம்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மூலம், பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக, தொடக்கத்தில் மத்திய அரசு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. மேலும், இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி  சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டது. 

தேசிய திறன் தகுதிக் கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறை நிர்ணயித்துள்ள தரத்திற்கு ஏற்ப, தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியைப் பெறுவோர் தங்களுக்கு விருப்பமான ஒரு பயிற்சியை அதற்கான மையத்தில் பதிவு செய்து பெறலாம். பயிற்சிக் காலம் முடிந்ததும் அவரின் திறன் மதிப்பீடு செய்யப்படும். மேலும், பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்படும்.

திறன்மிகு இந்தியா திட்டத்தின் இன்றைய நிலை என்ன?

திறன் இந்தியா - ஸ்கில் இந்தியா

இளைஞர்களை அதிகளவில் கொண்டுள்ள இந்தியாவில் உள்ள இளைஞர்களின் தனிப்பட்ட தொழில் திறன், மற்ற நாடுகளைக் காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளது. உலக அளவில் ஏற்படவிருக்கும் தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்க ஏதுவாக, அதிகளவிலான இந்திய இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சியை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த எஸ்.டி.எ.ஆர் (STAR) என்னும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 2013-2014 ஆண்டில் மட்டும் 14 லட்சம் நபர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா முழுவதும் தற்போது 20,900-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் இதுவரை சுமார் 14 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

`ஸ்கில் இந்தியா' திட்டத்தின் கீழ் மட்டும், பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, தீனதயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி கௌஷல் கேந்த்ரா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெயர் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே இலக்குடன் செயல்பட்டு வருபவைதாம்.

இந்தத் திட்டங்களால் பயனடைந்திருப்பவர்கள் கோடிக்கணக்கானோர் என்று மத்திய அரசு கூறினாலும், உண்மையான தகவல்களைப் பார்க்கும்போது, அவை முற்றிலும் மாறுபடுகிறது. பல்வேறு பெயர்களில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியதற்குப் பதில், குறிப்பிட்ட சில திட்டங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தாலே இந்த எண்ணிக்கையை விட அதிகமானோர் பயனடைந்திருப்பர். 

வேலைவாய்ப்பின்மையை போக்கும் வகையில், அதிகளவிலான இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கடனுதவி அளிப்பதுடன், இளைஞர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தித் தரும் இத்திட்டம் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.

-தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்