பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் பிழை! - கொளுத்திப்போட்ட காங்கிரஸ் அட்மின்... அடித்துக்கொண்ட தொண்டர்கள் | BJP manifesto error!

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (09/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (09/04/2019)

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் பிழை! - கொளுத்திப்போட்ட காங்கிரஸ் அட்மின்... அடித்துக்கொண்ட தொண்டர்கள்

பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் எனக் கூறுவதற்குப் பதிலாக, பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வதற்காகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அர்த்தம் வரும்படி பிழையுடன் சொல்லப்பட்டுள்ளது.

நேற்று (8.4.2019) பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் 32வது பக்கத்தில் பெண்களின் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்படும் சட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. அதில், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும், அதற்காக உள்துறையில் தனிப்பிரிவு கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக, பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் எனக்கூறுவதற்குப் பதிலாக, பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வதற்காகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற அர்த்தம் வரும்படி பிழையுடன் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தவற்றை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அப்படியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, 'பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் குறைந்தபட்சம் ஒரு கருத்து அவர்களது உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது' என்று கிண்டலாகக் கூறியுள்ளது.

மோடி ராகுல்

இந்த ட்வீட், நேற்று பெரிய அளவில் கிண்டலும் கேலியுமாக விவாதத்துக்கு உள்ளானது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் மாறி மாறி ட்விட்டரில் சண்டையிட்டுக்கொண்டார்கள். 'அடக்கடவுளே! அவர்கள் உண்மையிலேயே அவர்களது தேர்தல் அறிக்கையில் இப்படியொரு தவற்றைச் செய்துவிட்டார்களா அல்லது தெரிந்தேதான் அவர்களது இதயத்திலிருந்து இந்த வரி தோன்றியதா?' என்றும், 'இதுதான் பா.ஜ.க-வின் உண்மையான முகம்' என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கமென்ட் போட்டுள்ளார்கள். 'மனதின் ஆழத்திலிருந்த ரகசியம் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டுவிட்டது!' என்று ஒரு காங்கிரஸ் தொண்டர் கிண்டலடித்துள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர்

இவர்களுக்குப் பதிலடியாக பா.ஜ.க ஆதரவாளர்களும், 'ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையின் கருத்தைப் பார்க்காமல் பிழைதிருத்தும் வேலையை மட்டும் செய்கிறார். இப்படியே இருந்தால் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான்' என்றும், இன்னொருவர், 'ஆங்கிலத்தில் இதெல்லாம் சின்ன பிழைதான். இப்படி பிழை ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். இதை விட்டுவிட்டு வேறு உருப்படியான விஷயத்தில் கவனம் செலுத்தலாம்' என்றும் கூறியுள்ளார். இப்படியாக ஆயிரக்கணக்கில் கமென்டுகளைப் பதிவிட்டு இருதரப்பினரும் பரபரப்பாக மோதிக்கொண்டார்கள். ஆக, சமூக வலைதளத்தில் தொண்டர்களிடையே விவாதத்தைக் கிளப்பிவிடுவதில் காங்கிரஸ் கட்சி அட்மின் ரொம்ப நுட்பமாக வேலைபார்ப்பது தெரிகிறது. சபாஷ், சரியான போட்டி!