தனியார் ஊழியர்களுக்கான பி.எஃப் அளவை உயர்த்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?! | Supreme Court push up pension of private sector employees

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (09/04/2019)

கடைசி தொடர்பு:18:59 (09/04/2019)

தனியார் ஊழியர்களுக்கான பி.எஃப் அளவை உயர்த்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?!

தனியார் ஊழியர்களுக்கான பி.எஃப் அளவை உயர்த்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?!

தனியார் ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் 15,000 ரூபாய் என்ற வருமான உச்சவரம்பை நீக்கிய கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்களும் இந்தத் திட்டத்தின் பயனை அனுபவிக்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் பென்ஷன் தொகை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

அரசு வேலையின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் பென்ஷன் பலன், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இனி பெரிய அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கிடைக்கக்கூடிய லாபம் குறித்து, பலரும் பல்வேறுவிதமான கணக்கீடுகள் போடுகிறார்கள். அனைத்தும் தனியார் நிறுவன ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. 

பிஎஃப் - தனியார் ஊழியர்கள்

உண்மையில் இந்தத் தீர்ப்பால் அத்தகைய பலன் கிடைக்க வாய்ப்புள்ளதா என நிதி ஆலோசகர் சங்கரிடம் கேட்டபோது,

``முதலில் நடைமுறையிலிருக்கும் வருங்கால வைப்புநிதித் திட்டத்தைப் பார்க்கலாம். மாதச் சம்பளம் என்பது, அடிப்படை வருமானம் மற்றும் கருணைத்தொகை இரண்டும் இணைந்தது. தற்போதுள்ள திட்டப்படி, பணியாளர்கள் தரப்பிலிருந்து 12 சதவிகிதம் முழுமையாக வருங்கால வைப்புநிதித் திட்டத்துக்குச் சென்றுவிடுகிறது. நிறுவனத்தின் தரப்பிலிருந்து 12 சதவிகிதத்தில் சேமிப்பில் சேர்க்கப்படும். இதில் நிறுவனத்தின் தரப்பிலிருந்து தரப்படும் 12% தொகையில் 8.33% பென்ஷன் திட்டத்துக்கும், 3.67% வருங்கால வைப்புநிதிக்காகவும் சேமிக்கப்படுகிறது. அதிகபட்ச வருமான வரம்பாக 15,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பென்ஷன்தொகை கணக்கீட்டுக்குப் பணியாளரின் கடைசி ஐந்து ஆண்டுச் சம்பளத்தின் சராசரியைக் கணக்கில்கொள்கிறார்கள். அதேபோல, 2014-க்குப் பிறகு பணியில் சேர்ந்து 15,000 ரூபாய்க்குமேல் வருமானம் ஈட்டுபவர்கள், இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். 

இதை ஒரு கணக்கீடாகப் பார்த்தால், ஒருவரின் கடைசி ஐந்து ஆண்டுகளுக்கான மாதச் சம்பளத்தின் சராசரி தோராயமாக ரூ.10,000; அவருடைய முழுமையான பதவிக்காலம் 33 ஆண்டுகள் எனில், அவருக்குக் கிடைக்கும் மாதாந்தர பென்ஷன், (10,000*33) / 70   = 4,715 ரூபாய்.

பிஎஃப்

வி.சங்கர்உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வருமான வரம்பு நீக்கப்படுகிறது. எனவே அவர்களது முழு வருமானமும் கணக்கில்கொள்ளப்படும். பென்ஷன்தொகை கணக்கீட்டுக்கு, பணியாளரின் இறுதி ஆண்டுச் சம்பளத்தின் சராசரி மட்டுமே கணக்கில்கொள்ளப்படும். மேலும், 2014-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களும் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். இந்தப் புதிய முறையை ஒரு கணக்கீடாகப் பார்த்தால், ஒருவரின் கடைசி ஆண்டுக்கான மாதச் சம்பளத்தின் சராசரி தோராயமாக ரூ.50,000. அவருடைய முழுமையான பதவிக்காலம் 33 ஆண்டுகள். எனில், அவருக்குக் கிடைக்கும் மாதாந்தர பென்ஷன், (50,000*33) / 70 = 23,572 ரூபாய். ஆக, அவரது பென்ஷன்தொகை 18,857 ரூபாய் அதிகரிக்கிறது. இது தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

வருங்கால வைப்புநிதிக்கான சேமிப்பு என்பது, இரு கை ஓசை போன்று, பணியாளரும் நிறுவனமும் இணைந்து சேமிக்கும் முறை. பணியாளர்களின் முழுமையான சம்பளத்துக்கும் 12% சேமிப்பாகச் செலுத்துவதென்றால், நிறுவனத்துக்கு திடீர் பேரிழப்பாக இருக்கும். அதிக அளவிலான பணியாளர்களைக்கொண்டுள்ள ஒரு நிறுவனத்துக்கு இதைத் தாங்கும் அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும். அதேபோல மாதம்தோறும் லாபம் குறையாதவாறு இருக்க வேண்டும். இல்லையென்றால், பணியாளர்களைக் குறைக்கவேண்டிய சூழல் ஏற்படலாம். உற்பத்தியும் பாதிக்கப்படும்.

ஒருவேளை, நிறுவனத்தின் தரப்பிலிருந்து செலுத்தப்படவேண்டிய 12% தொகையை பணியாளர்களே செலுத்துவதாக ஒப்புக்கொண்டால், அதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா என்றும் பார்க்க வேண்டும். அதேபோல, பணியாளர்களின் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ள அனைத்துப் பணியாளர்களும் ஒப்புதல் தரவேண்டும். ஒரு பணியாளருக்கு மாதச் சம்பளம் போக, மற்ற சலுகைகளும் சேர்த்து வரும் மொத்த செலவுத்தொகை (Cost to the company) அதிகரிக்கும்பட்சத்தில், அதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளும் எடுத்தாக வேண்டும்.

பிஎஃப்

அடுத்து, பணியாளரின் தரப்பில் முழுச் சம்பளத்திலிருந்து 12% பிடித்தம் செய்வதற்கு, பணியாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது. பிடித்தம் போகப் பெறக்கூடிய சம்பளத்தொகை திடீரெனக் குறைந்தால், அது பணியாளர்களையும் பாதிக்கும். இவை அனைத்தைப் பற்றியும் பணியாளர் சங்கத்துடன் நிர்வாகத்தின் தரப்பில் பேசி முடிவெடுக்க வேண்டும்.

இறுதியாக, 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேர்க்கும்பட்சத்தில், 2014-க்குப் பிறகான ஐந்தாண்டுகளையும் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேர்த்தாகவேண்டியிருக்கும். அப்படியானால், அதுவும் கூடுதல் நிதிச்சுமையாக இருதரப்பினருக்கும் இருக்கும். இதற்கு எப்படித் தீர்வு காண்பார்கள் எனத் தெரியவில்லை. பணியாளர்களுக்கு லாபம் என்பதைத் தாண்டி, இந்தப் புதிய விதிமுறை மாற்றத்தை நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்குறிதான் பெரிதாக இருக்கிறது" என்றார்.

பிஎஃப் - தனியார் ஊழியர்கள்

வருங்கால வைப்புநிதித் திட்டம் குறித்த தனது கருத்தை, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. தற்போது இதை நடைமுறைப்படுத்துவது குறித்து, வருங்கால வைப்புநிதி ஆணையம்தான் திட்டம் வகுத்து முறையாகச் செயல்படுத்த வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்