நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் மகனின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு!  | LS polls: Kamal Nath, son Nakul jointly own assets worth over Rs 780 cr

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (10/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (10/04/2019)

நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் முதல்வர் மகனின் மிரளவைக்கும் சொத்து மதிப்பு! 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத்தின் மகன் நாகுல் நாத்தின் சொத்து மதிப்பு 660.01 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகுல் நாத் - கமல் நாத்

இம்மாதம் 29-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற நான்காம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், இத்தேர்தலில் சிந்த்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிடும் கமல்நாத்தின் மகன் நாகுல் நாத், நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில், அவர் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், தனக்கு 660.01 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனக்கு 615.93 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், தன் மனைவி பிரியாவுக்கு 2.30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தன்னிடம் உள்ள சொத்துகளில், அசையா சொத்துகளின் மதிப்பு 41.77 கோடி ரூபாய் எனவும், மனைவிக்கு அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தனக்கோ அல்லது தன் மனைவிக்கோ சொந்த வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், அதே சமயம் 896.669 கிராம் தங்கக் கட்டிகள், 7.630 கிலோ வெள்ளி, 147.58 காரட் வைரம் மற்றும் 78.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக் கற்கள் பதித்த நகைகள் இருப்பதாகவும், மனைவியிடம் 270.322 கிராம் தங்க நகையும், 161.84 காரட் வைரம் மற்றும் 57.62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் பதித்த நகையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இவை தவிர பல்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட்டுகள், இந்தியா, துபாய் மற்றும் ஷார்ஜாவிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் ஷேர்கள் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும் தன் சகோதரருக்கும் சிந்த்வாரா மாவட்டத்தில் 7.82 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நாகுல் நாத்தின் சொத்து மதிப்பு

பி.பி.ஏ பட்டப் படிப்பு படித்துள்ள நாகுல் நாத், கடந்த ஆண்டு தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குத் தாக்கலில், தனது ஆண்டு வருமானம் 2.726 கோடி ரூபாய் எனவும், மனைவியின் ஆண்டு வருமானம் 4.18 கோடி ரூபாய் எனவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நாகுல் நாத்தின் தந்தையும் மத்தியப்பிரதேச முதலமைச்சருமான கமல்நாத், தனது சொத்து மதிப்பு 124 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனுடன் ஒப்பிடுகையில், கமல் நாத்தின் சொத்து மதிப்பைவிட அவரின் மகனின் சொத்து மதிப்பு 5 மடங்கு அதிகமாக உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க