`3000 அடி உயரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்! - மின்னணு எந்திரத்துடன் மலைகளில் 3 மணி நேரம் பயணித்த அலுவலர்கள் | 3 Hour Trek For Election Teams To Reach Poll Booth

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (11/04/2019)

கடைசி தொடர்பு:10:59 (11/04/2019)

`3000 அடி உயரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்! - மின்னணு எந்திரத்துடன் மலைகளில் 3 மணி நேரம் பயணித்த அலுவலர்கள்

தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. 20 மாநிலங்களில் உள்ள 90 மக்களவைத் தொகுதிகளுக்கு, முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலை நடத்துவது, தேர்தல் அலுவலர்களுக்கு கடும் சிக்கலாக இருக்கும். மலைப்பிரதேசங்கள் நிறைந்த பகுதி என்பதால், அங்கு வாக்குச்சாவடி ஏற்படுத்துவது என்பது கடினமான காரியமாக உள்ளது. இந்நிலையில், புக்‌ஷா ஃபோர்ட் (Buxa Fort) பகுதியில் உள்ள 7000 வாக்காளர்களுக்காக காடுகள் மற்றும் மலைகளில் 3 மணி நேரம் பயணம் மேற்கொண்டு, 3 வாக்குச்சாவடிகளை ஏற்படுத்தியுள்ளனர்.           3 தேர்தல் குழுவினர், சுமார் 3 முதல் 8 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு, வாக்குச்சாவடிகளை அடைந்துள்ளனர். இந்த வாக்குச்சாவடிகள், தரைமட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் உள்ளது. தேர்தல் நடத்துவதற்குத் தேவையான உபகரணங்களை  22 பணியாட்களை வைத்து சுமத்துகொண்டு, நேற்று மாலையே அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

மேற்கு வங்கம்

இதுகுறித்து பேசியுள்ள தேர்தல் அலுவலர்கள், “இது, மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா. அதைப் பாதுகாக்கும் வண்ணம் நாங்கள் இங்கு வந்துள்ளோம். வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்கக் காத்துள்ளனர். இந்த இடங்களுக்கு வருவதற்கு முன் போலீஸாரின் பாதுகாப்பைக் கோரியிருந்தோம். சமீபத்தில் இங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போடுவதைத் தடுத்த தேர்தல் அதிகாரி ராஜ்குமார் ராய் ரயில் முன் தள்ளி கொலைசெய்யப்பட்டார். அதுபோன்ற சம்பவம் எங்களுக்கு நடக்காமல் இருக்க, பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி இருந்தோம்'' என்றனர்

தேர்தல் அலுவலர்கள்

அதேபோல, ஒடிஷா மாநிலத்தில் உள்ள துலாம் ராம்பூர் (Thuamul rampur) கிராமத்திற்கு மலைகள், ஆறுகளை எல்லாம் கடந்து செல்ல வேண்டும்.100 சதவிகிதம் வாக்குப்பதிவைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை அனுப்பி, வாக்குப் பதிவை உறுதிசெய்கின்றனர். அந்த வகையில் துலாம் ராம்பூர்  தேர்தல் அலுவலர்கள் நேற்று மாலையே பயணப்பட்டனர்.