`மாறாதய்யா மாறாது... மணமும் குணமும் மாறாது..!' பழைய பாடலும், பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையும் | bjp released its manifesto of 2019 election

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (11/04/2019)

கடைசி தொடர்பு:14:25 (11/04/2019)

`மாறாதய்யா மாறாது... மணமும் குணமும் மாறாது..!' பழைய பாடலும், பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையும்

`மாறாதய்யா மாறாது... மணமும் குணமும் மாறாது..!' பழைய பாடலும், பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையும்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (!?) பி.ஜே.பி.–யின் தேர்தல் அறிக்கை வெளியாகிவிட்டது. 15 தலைப்புகளில் 45 பக்கங்களில் 75 வகையான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். 'ஐந்தில் முடியும் வகையில் அமைத்தால் ஆட்சியைத் தக்கவைக்கலாம்' என்று ஏதாவதொரு சாமியார் ஐடியா கொடுத்திருப்பார் போல. ஆனால், அத்தனை சங்கதிகளும் ‘அப்போ சொன்ன அதே ஆலமரம்’ கணக்காகவே இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பி ஜே பி கூட்டம் - தேர்தல் அறிக்கை

எப்படியிருக்கிறது பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை?

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது வெளியிட்ட அறிக்கையை ஆண்டை மட்டும் மாற்றி வெளியிட்டிருக்கிறார்களோ எனத் தோணும் அளவுக்கு இருக்கிறது. அதே கலர்.. அதே சைஸ்... அதே டிசைன்...! நடுநடுவே, நம்மைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறார் நமோ. இதைத்தான், இத்தனை மாதங்களாக தயாரித்துக் கொண்டிருந்திருக்கிறார் ராஜ்நாத் சிங். 7,700 பரிந்துரைப் பெட்டிகள், 300 ரத யாத்திரைகள், 4000 நிகழ்ச்சிகள் நடத்தி, ‘ராமர்கோவில் கட்டுவோம், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். இதற்கொரு குழு, இதற்கொரு தலைவர்?!

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி எழுதியிருக்கும் கடிதத்துடன் அறிக்கை ஆரம்பமாகிறது. “அனைவருக்கும் வீடு கட்டுவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் காட்டுவேன்” என்பதை முக்கிய வாக்குறுதிகளாக முன்னிறுத்தி இருக்கிறார். 2014-ம் ஆண்டிலும் இதையேதான் சொன்னார். 2019-லும் அதையேதான் சொல்கிறார். கவலை வேண்டாம்... 2024-ம் ஆண்டு தேர்லின்போதும் இதையேதான் சொல்வார்.

ஆனால், ``91 சதவிகிதம் கிராமங்களுக்கு ரோடு போட்டிருக்கிறோம், 100 சதவிகிதம் கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுத்திருக்கிறோம், 36 புதிய விமான நிலையங்களைத் தொடங்கியிருக்கிறோம், ஏகப்பட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்" என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் தகவல்களை, இதயம் பலவீனமானவர்கள் படிக்காமல் இருப்பது நல்லது. 

``2014-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘வளர்ச்சி’ என்ற வார்த்தையை 79 இடங்களில் பயன்படுத்தியிருந்தார்கள். இப்போது  76 இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்று ஓர் ஆங்கில ஊடகம் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறது. ஆனால், இம்முறை வளர்ச்சியுடன் சேர்த்து பாதுகாப்பு என்பதையும் முக்கியமாக முன்னிறுத்தியிருக்கிறார்கள். ’பாதுகாப்பு’ எனும் வார்த்தை 46 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். அறிக்கையின் ஆரம்பத்திலேயே, 'ராணுவத்தை வலுப்படுத்துவோம்', 'நவீனரக ஆயுதங்களை வாங்குவோம்' என்று ராணுவ பாசத்தை பொழிந்திருக்கிறார்கள். சந்தடிசாக்கில், சமீபத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், ஏர் ஸ்ட்ரைக் மேட்டர்களையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘மேக் இன் இந்தியா’  திட்டம் மூலம் உள்நாட்டிலேயே அதிகளவில் ஆயுதங்கள் தயாரிப்போம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான கான்ட்ராக்ட், அம்பானிக்கு கொடுக்கப்படும் என்ற வார்த்தை மட்டும் ஏனோ மிஸ்ஸாகி விட்டது. `சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்போம்', 'இடதுசாரி பயங்கரவாதத்தை ஒழிப்போம்' என்பன போன்ற ’மானே, தேனே, பொன்மானே’ போடவும் தவறவில்லை. வடகிழக்கு மாநிலங்களைக் கொதிக்கவைத்த குடியுரிமைச் சட்டமசோதா குறித்து அதிகம் அடக்கியே வாசித்திருக்கிறார்கள். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35 ஏ பிரிவை நீக்குவோம் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சட்டம் அமலில் இருப்பதால் காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதே அதற்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். 

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை வெளியீடு

வட்டியில்லா கடன் அட்டை, நாடு முழுவதும் சேமிப்புக் கிடங்குகள், 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்று விவசாயிகளை நோக்கி ஆசைவார்த்தைகள் பேசுகிறது அறிக்கை. 'ஆட்சியில் இருந்தபோது, கடந்த 5 ஆண்டுகளில் இவற்றையெல்லாம் செய்திருந்தால் விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காதே?' என்ற கேள்விக்குத்தான் பதில் இல்லை. அதுபோக, ‘விவசாயக்கடன் ரத்து’ குறித்து எதுவுமே சொல்லாதது, இந்தியாவின் விவசாய சமூகத்தை இந்த அரசு எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வழக்கம்போல, `நதிகள் இணைக்கப்படும்' என்ற வாக்குறுதியையும் சேர்த்திருக்கிறார்கள். அத்வானிக்கு மோடி மைக் பிடித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து சொல்லப்பட்டு வரும் வாக்குறுதி அது. இம்முறையும் சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு அப்பால் அந்த வாக்குறுதிக்கு மதிப்பில்லை. ஆனால், நதிகள் இணைப்பு வாக்குறுதிக்கு தம்ஸ்அப் காட்டியிருக்கிறார் தர்பார் ரஜினி. ‘ரஜினியின் ஆதரவு எங்களுக்கே’ என்று மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மலர்க் கட்சிக்காரர்கள். அதைச் சொல்லவும் வேண்டுமா?

அ.தி.மு.க–வும், பா.ம.க–வும் வலியுறுத்திய ஏழு பேர் விடுதலை, நீட் தேர்வு ரத்து போன்ற கோரிக்கைகளை பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை சட்டையே செய்யவில்லை. சுப்பிரமணியன் சுவாமி முன்பே சொல்லியதுதான் அது என்பதால், புதிதாக ஆத்திரப்பட ஏதுமில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் வைஃபை மூலம் இணைப்போம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். பாரத் நெட் என்று அதற்குப் பெயராம். சென்னை அண்ணா சாலையிலேயே சிக்னல் கிடைக்கவில்லை என்று பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இதுவேறு.

‘ஸ்டார்ட் அப்’களுக்கு 20,000 கோடி ரூபாய் நிதி திரட்டித்தரப்படும்' என்ற அறிவிப்பும் இருக்கிறது அறிக்கையில். பக்கோடா கடை போட விரும்பும் இந்திய இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  2014 - 2019 வரையிலான ஆட்சிக்காலத்தில் 17 கோடி தொழில்முனைவோர், முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அதை இம்முறை 30 கோடி பேராக உயர்த்தப் போகிறார்களாம். நிஜமாகவே 17 கோடி பேர் வாங்கியிருந்தால் அது மாபெரும் தொழில் புரட்சிதான். அப்படி நடந்திருப்பதாக கள நிலவரம் சொல்லவில்லையே. 

பிரதமர் மோடி - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை

’மேக் இன் இந்தியா’ போல ’ஸ்டடி இன் இந்தியா’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற திட்டம் கவனம் ஈர்க்கிறது. இதன் மூலம், வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் அளவுக்கு இந்தியக் கல்வி நிலையங்களின் தரத்தை உயர்த்தப் போகிறார்களாம். இதைப் பார்க்கும் நேரத்தில் ரோஹித் வெமுலாவின் கள்ளங்கபடமற்ற சிரித்த முகம் நினைவில் வந்து போகிறது. தேசிய டிஜிட்டல் நூலகத்தின் மூலம் மாணவர்களுக்கு முன்னணிப் பத்திரிகைகளை இலவசமாகக் கொடுக்கவும் திட்டம் சொல்லியிருக்கிறார்கள். ஆர்கனைசரும் விஜய பாரதமும் அந்த முன்னணிப் பத்திரிகைகளாக இருக்கக்கூடும்.

'பெண்களின் உரிமையைப் பாதுகாப்போம்' என்று தேர்தல் அறிக்கையின் பல இடங்களில் முழங்கியிருப்பவர்கள், சபரிமலை விவகாரத்தில் அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவருவோம் என்பது இந்த அறிக்கையிலும் இருக்கிறது. அதேபோல, பொது சிவில் சட்டமும் ‘உள்ளேன் ஐயா’ சொல்கிறது. கடந்த முறை, நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, முத்ரா, ஆயுஷ்மான் என்று விதவிதமாக பெயர்வைத்து பீதியைக் கிளப்பியவர்கள், இம்முறையும் 'வன் தன்', 'தாரோகர் தர்சன்' என்று பீதி கிளப்பியிருக்கிறார்கள்.

`தாரோகர் தர்சன்' என்பது உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்மிகத் தளங்களை கண்டுகளிக்கும் விர்ச்சுவல் தியேட்டர் போன்ற ஏற்பாடாம். இதையெல்லாம் யார் யோசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பள்ளிக்கல்வியில் இருந்தே சமஸ்கிருதம் கற்பிக்கப்படும் என்ற வாக்குறுதி மட்டும் தேவையில்லாதது. ஏனென்றால், ஏற்கெனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைச்சொல்லாவிட்டால் எப்படி? அதேதான்.. `அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவோம்’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்கள். இதை உத்தவ் தாக்கரே கூட நம்புவாரா என்று தெரியவில்லை.

மொத்தத்தில், பி.ஜே.பி–யின் சங்கல்ப் பத்திரம், சந்திரமுகி படத்தில் வரும் பாம்பு அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது... தேர்தல் என்னும் படம் முடியும்போது, அது கிளம்பிப் போய் விடுமா, மீண்டும் பரணில்போய் படுத்துக்கொள்ளுமா என்பதை தேர்தல் ரிசல்ட்தான் முடிவு செய்யும்.


டிரெண்டிங் @ விகடன்