"தேர்தல் விதிமுறைகளை எந்தக் கட்சிகளும் பின்பற்றுவதில்லை!” கிருஷ்ணமூர்த்தி! | ex chief election commissioner on role of media in the upcoming parliamentary elections 2019

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (11/04/2019)

கடைசி தொடர்பு:19:22 (11/04/2019)

"தேர்தல் விதிமுறைகளை எந்தக் கட்சிகளும் பின்பற்றுவதில்லை!” கிருஷ்ணமூர்த்தி!

பிரசாரம் என்கிற பெயரில் தனிநபர்களைத் தாக்கக் கூடாது என்பது ஓர் அடிப்படை விதி. இதை எத்தனை கட்சிகள் பின்பற்றுகிறார்கள்?

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், தேர்தல் தொடர்பான செய்திகளால் நிரம்பிவழிகிறது ஊடகங்கள். இந்தச் சூழலில் தேர்தலையொட்டி, 'ஊடகங்களின் பங்கும்... எதிர்கொள்ளும் சவால்களும்' என்கிற தலைப்பிலான உரையாடல் சென்னை தரமணியில் உள்ள இந்திய ஊடகக் கழகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் அதில் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் அவை தேர்தல் காலங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துப் பேசப்பட்டது. 

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "முதன்முதலில் தேர்தல் நடத்தப்பட்டபோது மிகமிகக் குறைந்த வேட்பாளர்களே இருந்தார்கள். கட்சிகளும் அதற்கான கூட்டங்களும் குறைவாகவே இருந்தன. ஆனால், இந்திய அரசியல் பல பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. இத்தனை பரிணாம வளர்ச்சிக்கு இடையேயும் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயலாற்றிவருகிறது. இந்தியத் தேர்தல் வரலாற்றை, டி.என்.சேஷனுக்கு முன்பும் பின்பும் எனப் பிரிக்கலாம். சேஷன் ஆணையராகப் பதவியேற்கும்வரை தேர்தல் ஆணையம் இந்திய அரசின் ஓர் அங்கமாகவே கருதப்பட்டது. சிலர், தங்களது கடமையைச் செய்தாலும் அதையும் அரசுக்குச் சாதகமாகவே செய்தார்கள். ஆனால் சேஷன் வந்த பிறகு, அது மாறியது. ஆணையம் தற்போது தனது நம்பகத்தன்மையை இழந்துவருவதாக ஊடகவியலாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆனால், கடந்த தேர்தல்களைவிடத் தற்போதைய தேர்தல் ஆணையம் சந்திக்கும் பிரச்னைகள் சற்று வித்தியாசமானது. ஊடகங்களுக்கும் இந்தப் பிரச்னைகளில் பங்கு இருக்கிறது. கடந்த காலங்களில் எல்லாம் இப்படியான சர்ச்சைகள் ஆணையத்தின்மீது எழுப்பப்படும்போது ஊடகவியலாளர்கள் எங்களது கருத்துகளைக் கேட்டார்கள். ஆனால், தற்போதைய ஊடகங்கள், அப்படிக் கடமை உணர்வுடன் நடந்துகொள்வதில்லை. குஜராத்திலும் இமாசலப் பிரதேசத்திலும் நடந்த தேர்தல்களில் பி.ஜே.பி கட்சிக்குக் கிடைத்த வெற்றியில் தேர்தல் ஆணையத்துக்கும் வாக்கு இயந்திரங்களுக்கும் முக்கியப் பங்கு இருந்ததாக நான் சொன்னதாக ஒரு வட இந்தியச் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், நான் அப்படிச் சொல்லவே இல்லை என்பதுதான் உண்மை. தேர்தல் ஆணையத்தின்மீது குற்றஞ்சாட்டும் அத்தனை ஊடகங்களும் தங்களை எந்த அளவு சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தயாராக இருக்கின்றன... தேர்தல் ஆணையம் சந்திக்கும் சவால்கள் எத்தனை ஊடகங்களுக்குத் தெரியும்? தேர்தலைப் பொறுத்தவரை நடத்தை விதிகள் இருக்கின்றன. ஆனால், அவை எதுவும் சட்டமாக்கப்படவில்லை. அது சட்டமில்லை என்பதற்காகவே இந்தியாவில் இருக்கும் எந்தக் கட்சிகளும் அதைப் பின்பற்றுவதில்லை. பிரசாரம் என்கிற பெயரில் தனிநபர்களைத் தாக்கக் கூடாது என்பது ஓர் அடிப்படை விதி. இதை எத்தனை கட்சிகள் பின்பற்றுகின்றன? விதிகளை மீறும் கட்சிகளின் சின்னத்தை முடக்கலாம் அல்லது தேர்தலை ஒத்திவைக்கலாம். ஆனால், இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்போனால் ஆணையம் தேர்தலை நடத்த முடியாத நிலைமைதான் ஏற்படும். இதுதான் இன்றைய நிலைமை. இந்தச் சூழலில் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது” என்றார். 

தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

மேலும், கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “நான் பதவியில் இருந்த காலகட்டத்தில், அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பல நேரங்களில் சார்ந்துபோகாதபோது, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு கட்சிகளிடமிருந்தும் எனக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. 'என் குடும்பத்தை ஒழித்துவிடுவேன்' என்றார்கள். ஆனால், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. என் மனைவியை மட்டும் பாதுகாப்பாக இருந்துகொள்ளச் சொன்னேன். ஆனால், அத்தனை மிரட்டல்களையும் கடந்து சுதந்திரமாகச் செயல்பட்டேன். உண்மையில், அரசு அதிகாரிகளால் மட்டுமே எந்தச் சூழலிலும் அரசியலுக்கு ஆளாகாமல் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே அரசும், அதிகாரிகளை மதிப்புடனும் சுயமரியாதையுடனும் நடத்தும்” என்றார். 

உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்