வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் களம் - ஒரு பார்வை!  | Parliamentary election in North eastern States - a roundup

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (11/04/2019)

கடைசி தொடர்பு:16:24 (11/04/2019)

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் களம் - ஒரு பார்வை! 

பல ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், மொத்தமாக 25 தொகுதிகள் என்ற கணக்கை கடந்த தேர்தலில் கையிலெடுத்தது பி.ஜே.பி. அதனால்தான் இந்த முறையும் தன் கூட்டணியை, அம்மாநில அரசுகளோடு வலுப்படுத்திக்கொள்ளவும் பி.ஜே.பி தவறவில்லை.

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் களம் - ஒரு பார்வை! 

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிக்கும் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு முக்கியமானவையாக இருக்கிறது வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் களம். இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 8 மாநிலங்கள் அடங்கிய 25 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வடகிழக்கு

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் காற்று வீசும் திசை பற்றிய சிறு அலசல். மேற்கூறிய 8 வடகிழக்கு மாநிலங்களில், அசாமில் மட்டுமே 14 தொகுதிகள், மற்ற மாநிலங்களில் ஒன்றிரண்டு தொகுதிகள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த 25 தொகுதிகளும், ஆளப்போகும் கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது காங்கிரஸ், பி.ஜே.பி இரு கட்சிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் இந்தத் தொகுதிகள் முக்கியப் பங்காற்றும் என்பதால், இரு கட்சியினரும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்புவரை, காங்கிரஸ் கோட்டையாக இருந்த வடகிழக்கு மாநிலங்கள், தற்போது பி.ஜே.பி வசம் சென்று விட்டன. தற்போதைய நிலையில், 8 வடகிழக்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. ஆனால், "மக்களின் எதிர்ப்பைப் பெற்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவகாரம், பி.ஜே.பி-க்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். 1955-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைத் திருத்த முயன்றதில், கடந்த இரண்டு மாதங்களில் வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் சூழல் பி.ஜே.பி-க்கு எதிராக மாறியிருக்கிறது" என்கிறார்கள் அங்கிருக்கும் அரசியல் விமர்சகர்கள். 

வடகிழக்கு

1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தில், ``பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த இந்து, சீக்கியம், பௌத்த, சமண, கிறிஸ்துவ மற்றும் பாரசீக மதங்களைச் சேர்ந்த, இந்திய அரசால் குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள், இனி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அவ்வாறு இந்தியாவில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான கால அளவும் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்று பி.ஜே.பி தரப்பில் சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர் பற்றியும் ரோஹிங்யா அகதிகள் பற்றியும் இதில் எதுவும் குறிப்பிடாமல், இன, மத பேதங்களோடு குடியுரிமை வழங்குவதாகவும், இது வடகிழக்கு மாநிலங்களின் அரசியலுக்கான காய் நகர்த்தல் என்றும் அரசியல் விமர்சகர்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுவே வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸின் ஆயுதமும்கூட. வட கிழக்கு மாநிலங்களின், இன அடையாளங்களைச் சீர்குலைக்கும் விதமாக இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இருப்பதாகச் சொல்லும் அவர்கள், இது பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.

வடகிழக்கு

இவை தவிர வேலையில்லா திண்டாட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களிடையே ஆளும் ஆட்சியின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் திருநர்களுக்கான சட்டம், அவர்களைக் காயப்படுத்துவதாகவும், தவறாகவும் இருப்பதாகச் கூறும் அஸ்ஸாம் திருநர்கள் அமைப்பு, அரசு அதை மாற்றாவிட்டால், தேர்தலைப் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர். திருநர் சமூகமும் அவர்களின் ஆதரவாளர்கள் எனப் பலரும் பி.ஜே.பி எதிர்ப்பு அலையில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். 

பல ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், மொத்தமாக 25 தொகுதிகள் என்ற கணக்கை கடந்த தேர்தலில் கையிலெடுத்தது பி.ஜே.பி. அதனால்தான் இந்த முறையும் தன் கூட்டணியை, அம்மாநில அரசுகளோடு வலுப்படுத்திக்கொள்ளவும் பி.ஜே.பி தவறவில்லை. ஆளும் அரசுகள் பி.ஜே.பி வசம் இருந்தாலும், நாகாலாந்து உட்படப் பிற மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளன. 

மிக அதிகமாகப் பழங்குடியின மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்களில், தங்கள் இன அடையாளம், வரலாறு, பாரம்பர்யம், நம்பிக்கைகளை ப்பாதுகாக்க, இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது வடகிழக்கு மாநிலத் தேர்தல் களம். ரிசல்ட் என்னவாகப்போகிறது என்பதை வரும் மே 23 அன்று நாம் அறிந்துகொள்வோம். 


டிரெண்டிங் @ விகடன்