மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா'-வில் நடந்தது என்ன..? பகுதி 6 | What Happened in Pradhan Mantri Gram Sadak Yojana? Part - 06

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (11/04/2019)

கடைசி தொடர்பு:20:28 (11/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா'-வில் நடந்தது என்ன..? பகுதி 6

பி.ஜே.பி அரசு, அண்மையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போட்டுள்ள சாலைகளின் அளவைக் காட்டிலும் இதே திட்டத்தின் கீழ், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளுக்கு முன்னரே 7,225 கோடி ரூபாய் செலவில் இப்போதைய மத்திய அரசைவிட அதிகளவு சாலைத் திட்டங்களை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா'-வில் நடந்தது  என்ன..? பகுதி 6

த்திய பி.ஜே.பி அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றி இந்தத் தொடரில் நாம் பார்த்து வருகிறோம். அந்தவகையில் இந்தப் பகுதியில் கிராமங்கள் உட்பட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலை வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான திட்டமாக 'பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா' செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இங்கே பார்ப்போம்...

மோடி சொன்னதும் நடந்ததும்

பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா: 

இந்தியாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, பாலைவனப் பகுதி, குக்கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் சாலை வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2000-ம் ஆண்டில் 'பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா' என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முழு அளவில் மத்திய அரசின் நிதியிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

'கிராம சாலை திட்டத்தில்' நடந்தது என்ன..?

பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா

பிரதமர் மோடி பல மேடைகளில் தங்களின் ஆட்சி குறித்து மிகப் பெருமையாகச் சொல்லிக்கொள்வது, அனைத்துக் கிராமங்களுக்கும் பி.ஜே.பி அரசு சாலை வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்பதுதான். அதன்படி, 2012 - 2013-ம் நிதியாண்டில், நாள் ஒன்றுக்கு 66 கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்பட்ட சாலைகள், 2016 - 2017-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 133 கிலோ மீட்டர் தொலைவு என்ற நிலையை எட்டி, சாலைகள் போடப்பட்டு வருகின்றன என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆம். பிரதமர் மோடி கூறுவது உண்மைதான். ஆனால், மத்திய பி.ஜே.பி அரசு மட்டும் இந்தச் சாதனையைச் செய்துவிடவில்லை. 2008 - 2009-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, நாளொன்றுக்குப் போடப்பட்ட சாலைகளின் அளவு 144 கிலோமீட்டர் ஆகும். அதே ஆண்டில் போடப்பட்ட மொத்த சாலைகளின் அளவு 52,405 கிலோமீட்டர். இணைக்கப்பட்ட மொத்த சாலைகளின் எண்ணிக்கை 14,475. இவை அனைத்துக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 7,225 கோடி ரூபாய் என்று தெரியவருகிறது. 

அதேநேரத்தில் 2018 - 2019-ம் ஆண்டு, அதாவது கடந்த நிதியாண்டில் பி.ஜே.பி ஆட்சியின்போது, நாளொன்றுக்குப் போடப்பட்ட சாலைகளின் அளவு 167 கிலோ மீட்டர். மொத்தமாக 46,322 கிலோமீட்டர் அளவு சாலைகள் போடப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் இணைக்கப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை 9,964. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி 19,000 கோடி ரூபாய். 

எனினும். பி.ஜே.பி அரசு, அண்மையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போட்டுள்ள சாலைகளின் அளவைக் காட்டிலும் இதே திட்டத்தின் கீழ், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, 10 ஆண்டுகளுக்கு முன்னரே 7,225 கோடி ரூபாய் செலவில் இப்போதைய மத்திய அரசைவிட அதிகளவு சாலைத் திட்டங்களை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

சாலைகள் வசதிக்காக இந்தத் திட்டத்தைத் தொடங்கியது பி.ஜே.பி அரசு என்றாலும், அந்தத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதை 10 வருடங்களாக திறம்பட செயல்படுத்தி வந்தது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

ஆக மொத்தம், '2014-ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு செய்ததைவிட அதிகமாக நாம் செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தில் சாலைத் திட்டங்களுக்காக இப்போதைய பி.ஜே.பி அரசு, அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ததைத் தவிர, ஆக்கபூர்வமான பணிகள் எதையும் செய்யவில்லை என்பதே நாம் அறிந்த உண்மை.

- தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்