ஆர்.பி.ஐ அனுமதியில்லாமல் செயல்படும் கூகுள் பே - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! | Google pay operates withour RBI permission - notice issued by HC

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (11/04/2019)

ஆர்.பி.ஐ அனுமதியில்லாமல் செயல்படும் கூகுள் பே - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பணப் பரிவர்த்தனையில் மிகவும் பிரபலமாக இருக்கக் கூடிய செயலி கூகுள் டிஜிட்டல் நிறுவனத்தின் கூகுள் பே ஆப். வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, ஏடிஎம் தேடி அலைய வேண்டியதில்லை, வரிசை இல்லை, ஆப் - இல் அனுப்பிய பணம் நேரடியாக வாங்கிக் கணக்கை சேரும் வசதி எனப் பல வசதிகளைக் கொண்டு, மக்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது கூகுள் பே செயலி.

கூகிள் பே

ஆனால் இந்த கூகுள் பே செயலிக்கு ஆர்பிஐ அனுமதி இல்லை, இந்திய அரசின் வணிக சட்டங்களுக்குள் இது அடங்கவில்லை, ஆப் -இல் பயனீட்டாளர்கள் பதியும் ஆதார், பான் உள்ளிட்ட தனி நபர் விவரங்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இந்த நிறுவனத்துக்கு நோடல் அமைப்பு இல்லை, பணப் பரிவர்த்தனைகளைப் பற்றிய முறையான தரவு சேமிப்பில்லை என்பது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன், பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் அபிஜித் மிஸ்ரா.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர மேனன், அனூப் பாம்பணி அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் வங்கி செயல்பாடுகள் முறைப்படுத்தும் அமைப்பான ஆர்பிஐ -இடம் அனுமதி வாங்காமல், அமெரிக்கா நிறுவனமான கூகுள் இந்தியாவில்  பணப் பரிவர்த்தனை சேவையை எவ்வாறு செயல்படுத்தமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யச் சொல்லி இந்திய ரிசர்வ் வங்கிக்கும், கூகுகிள் இந்தியா நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர்நீதிமன்றம். 

குறிப்பாக, ரிசர்வ் வங்கி மார்ச் 20 2019 -இல் வெளியிட்ட ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட "payment system operators List " எனப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளத் தகுதி பெற்றிருக்கும் அமைப்புகளின் பட்டியலில் கூகுள் பே செயலி இல்லாததை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 

இதற்குப் பதிலளித்திருக்கும் கூகுள் நிறுவனம், தன்னுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்திருக்கும் வங்கிகளுக்கு, தொழில்நுட்ப உதவி அளிக்கும் நிறுவனமாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம், நாங்கள் தனித்து பணப் பரிவர்த்தனையை செயல்படுத்துவதில், தொழில்நுட்ப உதவிக்கு நாங்கள் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை இல்லை என்று கூறியிருக்கிறது.

இருப்பினும், பயனீட்டாளர்கள் தரவு பாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. தரவு திரட்டு உலக அளவில் மிகப்பெரும் வர்த்தகமாக மாறியிருக்கும் நிலையில், முறையான கண்காணிப்பு இன்றி ஒரு அமெரிக்கா நிறுவனம் இந்திய மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைக் கையாளுவது என்பது இந்திய பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்பதை மறுக்க இயலாது.

ரிசர்வ் வங்கி, கூகுள் இரண்டும் முறையாக விளக்கத்தை அளித்து, நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளும் பதிலை சொல்லாவிடின், நீதிமன்றம் கூகுள் பே சேவையை முடக்க வாய்ப்பிருப்பது, குறிப்பிடத்தக்கது.