`வயநாட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்... இப்படிப் பேசுகிறீர்கள்?’ - அமித் ஷாவை கண்டித்த பினராயி விஜயன் | Pinarayi Vijayan slams Amit Shah for calling Wayanad as Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (11/04/2019)

கடைசி தொடர்பு:22:06 (11/04/2019)

`வயநாட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்... இப்படிப் பேசுகிறீர்கள்?’ - அமித் ஷாவை கண்டித்த பினராயி விஜயன்

வயநாட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனப் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரேதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிடும் அதே நேரத்தில் கேரள மாநிலம் வயநாடு தொகுதிலும் போட்டியிடுகிறார். இதற்காகத் தன் சகோதரி பிரியங்கா காந்தியுடன் வந்து வேட்பு  மனுத்தாக்கல் செய்துள்ளார். ராகுல் வயநாட்டில் போட்டியிடுவதைப் பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, ``அமேதி தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்பார்கள் என்பதால், அதற்குப் பயந்து ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடச் சென்றுவிட்டார்" எனக் கடுமையாக விமர்சித்தவர் வயநாட்டில் இருக்கும் இஸ்லாமிய மக்களைப் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

அமித் ஷா

அவரின் இந்தப் பேச்சுக்கு, தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று நடந்த வயநாடு பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ``வயநாட்டைப் பற்றி அமித் ஷாவுக்கு என்ன தெரியும். வயநாட்டின் சுதந்திரப் போராட்ட பங்கு குறித்தோ, இங்குள்ள மக்கள் குறித்தோ ஏதாவது அவருக்குத் தெரியுமா. எதுவுமே தெரியாமல் பாகிஸ்தானுடன் சேர்த்து பேசி வயநாட்டை அமித் ஷா அவமானப்படுத்திவிட்டார். இஸ்லாமிய மக்கள் இருப்பதால் மட்டும் வயநாடு பாகிஸ்தான் ஆகிவிடுமா. இப்படி ஒப்பிட்டுப் பேசியவர் பாகிஸ்தானில் நடப்பதுபோல இங்கு என்ன நடக்கிறது என்பதைக் கூறவில்லை. 

பினராயி விஜயன்

வயநாட்டின் சுதந்திரப் போராட்ட பங்கு குறித்துத் தெரிந்திருந்தால் அவர் இப்படிப் பேசியிருக்க மாட்டார். எனக்குத் தெரிந்து சுதந்திரப் போராட்டம் குறித்து பா.ஜ.க-வினருக்கு எதுவும் தெரியாமல் இருக்கும். அதனால்தான் அவர் இப்படிப் பேசியிருக்கிறார். மன்னர் பழசி ராஜாவுடன் இணைந்து வயநாட்டில் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்கள். பா.ஜ.க சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறாததால் அதுகுறித்து அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" எனக் காட்டமாகப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க