மன்மோகன், மோடி, ஜெ.. எல்லாரையும் ஒரு கை பார்த்தாச்சு அடுத்து ராகுல்தான்! - களத்தில் இறங்கும் ‘தேர்தல் மன்னன்’ | Padmarajan filed nomination in wayanad against rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (12/04/2019)

கடைசி தொடர்பு:13:20 (12/04/2019)

மன்மோகன், மோடி, ஜெ.. எல்லாரையும் ஒரு கை பார்த்தாச்சு அடுத்து ராகுல்தான்! - களத்தில் இறங்கும் ‘தேர்தல் மன்னன்’

கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட தேர்தல் மன்னன் பத்மராஜன்  பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலத்தில் உள்ள ஆத்தூரில்தான். இப்போது  மேட்டூர் பக்கத்தில் உள்ள குஞ்சான்டியூரில் பஞ்சர் கடை ஒன்றை  நடத்தி வாழ்ந்து வருகிறார். கடந்த 1988-ல் களத்தில் இறங்கிய அவர் முதன்முறையாக மேட்டூர் சட்டமன்றத் தேர்தல் (எம்.எல்.ஏ) எனத் தொடங்கி, எம்.பி., குடியரசுத் தலைவர் தேர்தல் என மன்மோகன் சிங், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடி, விஜயகாந்த், கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா ஆகியோரை எதிர்த்து சுயேச்சையாக  போட்டியிட்டு தோல்வி அடைந்தே சாதனை படைத்து  வருபவர்.

தேர்தல்

கடந்த 30 ஆண்டுக்காலமாக தொடர்ந்து இதுவரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என 200 முறை போட்டியிட்டிருக்கிறார். குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பத்மராஜன், தற்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து நேற்று வயநாடு தேர்தல் நடத்தும் அதிகாரியான அஜயகுமாரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் பயணத்தில் தாக்கல் செய்த வேட்புமனுவில் 201-வது வேட்புமனு ஆகும். அதிக முறை மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட அவர் வயநாட்டிலும் மோதிர சின்னத்திலேயே போட்டியிடுகிறார். 

தேர்தலுக்கான டெபாசிட் பணமாக மட்டும் இதுவரையில் 30 லட்சம் செலவழித்துள்ள அவர், அதைத் தவிர தேர்தலுக்கென வேறு எந்தச்  செலவு செய்வதோ, பிரசாரம் செய்வதோ கிடையாது. மக்களிடையே தேர்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அதிகம் தோற்ற வேட்பாளர் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருவதாகக் கூறுகின்றனர் இவரைப் பற்றி தெரிந்த சிலர்.