`நாங்கள் விசாரிக்க முடியாது; இனி வழக்கு தொடர்ந்தால் அபராதம்!' - ஸ்டெர்லைட்டை எச்சரித்த நீதிபதிகள் | sterlite case dismissed by supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:33 (12/04/2019)

`நாங்கள் விசாரிக்க முடியாது; இனி வழக்கு தொடர்ந்தால் அபராதம்!' - ஸ்டெர்லைட்டை எச்சரித்த நீதிபதிகள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஆனால், வேதாந்தா நிறுவனம் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், அந்த ஆலையைத் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை, கடந்த பிப்ரவரி 18–ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட்

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தது. அது இன்னும் விசாரணையில் இருக்கிறது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை மெதுவாக நடப்பதால், இயந்திரங்கள் பழுதுபார்த்து, ஆலையைப் பராமரிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கழிவுகளை அகற்ற ஏற்கெனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதை நாங்கள் விசாரிக்க முடியாது. இனி இதுபோல வழக்கு தொடர்ந்தால் வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.