வெறுப்புக் குற்றம் அதிகம் நடந்த மாநிலம் எது... இது `வெறுப்பு விகாஸ்’ பட்டியல்! | Shaukat Ali is the new victim for the Right-wing extremism

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (13/04/2019)

கடைசி தொடர்பு:10:01 (13/04/2019)

வெறுப்புக் குற்றம் அதிகம் நடந்த மாநிலம் எது... இது `வெறுப்பு விகாஸ்’ பட்டியல்!

இவ்வளவு நடந்தும்கூட உள்துறை அமைச்சகத் தகவலின்படி, பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைத் தகவல்களை, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கவில்லை.

வெறுப்புக் குற்றம் அதிகம் நடந்த மாநிலம் எது... இது `வெறுப்பு விகாஸ்’ பட்டியல்!

ஏப்ரல் 7 - அஸ்ஸாமில், தனது உணவகத்தில் மாட்டுக்கறியை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார் ஷவுக்கத் அலி என்னும் இஸ்லாமியர். இந்த வெறுப்புக் குற்றச் சம்பவம் நடந்து நான்கு நாள்கள் கடந்த நிலையில், அதைப் பற்றிய முழு விவரமும் வெளியாகியிருக்கின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிரான, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களின் நீண்ட பட்டியலில் இந்தச் சம்பவமும் சேர்ந்திருக்கிறது.     

ஷவுக்கத் அலி தாக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, அவரது உணவகத்துக்கு வந்த பிஸ்வனாத் பகுதி இந்து இளைஞர்கள், மாட்டுக்கறியைக்கொண்டு செய்யப்படும் `கொரூர் மேங்கோ' என்னும் உணவை அங்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷவுக்கத் அலியை மிரட்டியிருக்கிறார்கள். அலியின் தந்தையால் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக நடத்தப்படும் அந்த உணவகத்தில், பல உணவுப் பொருள்களுடன் மாட்டுக்கறி உணவும் விற்பனை செய்யப்படுகிறது.

``மற்ற சைவ உணவுகளை உணவகத்தில் தயார்செய்தாலும், மாட்டுக்கறியை மட்டும் வீட்டிலிருந்தே சமைத்துக்கொண்டுவந்து விற்பதுதான் வழக்கம். அன்றைக்கு எனக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால், என்னுடன் கொண்டு வந்திருந்த மாட்டுக்கறி உணவை விற்காமல் ஓர் இடத்தில் மறைத்து வைத்திருந்தேன். அன்றைக்கு பிராய்லர் சிக்கனையும் மீனையும் மட்டும்தான் விற்பனைக்கு வைத்திருந்தேன். அந்த இளைஞர்கள் அன்று பிற்பகல் மீண்டும் கடைக்கு வந்து சோதனை செய்தபோது, மறைத்து வைத்திருந்த மாட்டுக்கறியை எடுத்து வீசிவிட்டு, மிக மோசமான வார்த்தைகளால் என்னை அவமானப்படுத்தினார்கள். 12 பேருக்குமேல் இருந்த அந்தக் கூட்டம், எனது பாத்திரங்கள், உணவு, சமையல் சிலிண்டர் என எல்லாவற்றையும் சாக்கடைக்குள் எறிந்தார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.       

வெறுப்புக் குற்றங்கள்                

கெளரக்‌ஷா என்னும் பசுப் பாதுகாவலர்களால் நடத்தப்பட்டு வந்த இத்தகைய தாக்குதல்களை, அமைப்பாகாத இந்துத்வ மனநிலைகொண்ட உதிரி மனிதர்களும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.பா.ஜ.க பதவியேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த வன்முறைகளின் எண்ணிக்கை இது. மனித உரிமை ஆர்வலரும், பசுப் பாதுகாப்பு என்னும் பெயரில் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்காகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் ஹர்ஷ் மண்டெர், ``ஊடகத்தின் கவனத்துக்கு வராத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். கடந்த ஐந்து வருடத்தில் இதன் எண்ணிக்கை வேகமாக வளர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். வன்முறைகளை நிகழ்த்துபவர்கள், அனுமதிக்கப்பட்ட சூழல் கிடைத்திருப்பதால் மட்டுமே இதைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள்.

இதுமட்டுமல்ல, வழிபாட்டுத்தலங்களில் குறிப்பாகத் தேவாலயங்களில் தொடுக்கப்படும் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் சகிப்பின்மையாளர்களின் வக்கிரத்தைக் காண முடிகிறது. பசுப் பாதுகாப்பின் பெயரில் நடத்தப்படும் கொலைகள், சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல்கள் இவை அனைத்துக்கும் நோக்கம் மத சகிப்பின்மையும் மதவெறியும்தான்” என்கிறார்.

இவ்வளவு நடந்தும்கூட உள்துறை அமைச்சகத் தகவலின்படி, பசுக்களை முன்வைத்து நடத்தப்படும் வெறுப்பு வன்முறைத் தகவல்களை, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கவில்லை. மனிதன் சட்டத்துக்கு உட்பட்டு தான் தேர்ந்தெடுக்கும் ஓர் உணவுமுறைக்காக அடித்துக் கொலை செய்யப்படுகிறான். அதைக் கண்டுகொள்ளாமல் , அதைக் கண்டிக்காமல் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும் அந்தக் கொலைகளை ஏதோவொரு வகையில் ஆதரிக்கவே செய்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த தேசத்தில் இருக்கும் பிற பிரச்னைகளைக் காட்டிலும் ஆபத்தானதும்,அறுவெறுப்பானதும் , அசிங்கமானதும் இதுவே. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்