இறந்த மாட்டின் கறியை வெட்டிய பழங்குடியின நபர் கொலை! - ஜார்க்கண்டில் கொடூரம் | Mob kills tribal in Jharkhand over suspicion of cow slaughter

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:00 (12/04/2019)

இறந்த மாட்டின் கறியை வெட்டிய பழங்குடியின நபர் கொலை! - ஜார்க்கண்டில் கொடூரம்

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எதிரான அதிக அளவிலான வெறுப்புக் குற்றங்கள் பதிவாகியிருப்பது, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ஜார்கண்ட்  ஆகிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இறந்த மாட்டின் கறியை வெட்டியதற்காக, ஜார்க்கண்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ப்ரகாஷ் லக்ரா என்னும் தொழிலாளி கொல்லப்பட்டிருக்கிறார்.

பா.ஜ.க ஆளும் மாநிலமான ஜார்க்கண்டில், நேற்று சத்தீஸ்கரின் ஜெய்ராகியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த கிராமவாசிகள், இறந்த மாட்டின் கறியை வெட்டிக்கொண்டிருந்த நால்வரைப் பார்த்ததும், அவர்களின்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு ஆளான அனைவரும் மயக்கமானதும், ராஞ்சியிலிருந்து 140 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தும்ரி காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்கப்பட்ட மூவரும் படுகாயமடைய, ப்ரகாஷ் லக்ரா என்னும் பழங்குடியினத் தொழிலாளி  உயிரிழந்திருக்கிறார். பசு பாதுகாப்பு தொடர்பான இந்தப் படுகொலையைப் பற்றி The Telegraph இணையதளத்திற்காகப் பேசியிருக்கும் கும்லா காவல் ஆணையர் அஞ்சனி குமார்ஜா, “இச்சம்பவத்தை விசாரிக்க சிறப்பு காவல்படை அமைக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட நபர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ப்ரகாஷ் லக்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

                                                                                                     வெறுப்புக் குற்றங்கள்

மார்ச் 2016ல், கெள ரக்‌ஷா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களால், கால்நடை வணிகரான மஜ்லூம் அன்சாரியும், லதேஹர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் கான் என்னும் சிறுவனும் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கால்நடை சந்தைக்குச் செல்லும்போது வழிமறிக்கப்பட்டு, கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் அவர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். படுகொலையில் தொடர்புடைய 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது அம்மாநில நீதிமன்றம். கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எதிரான அதிக அளவிலான வெறுப்புக் குற்றங்கள் பதிவாகியிருப்பது, பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட்  ஆகிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க