மதுவுக்காக கொலை; குப்பைத்தொட்டியில் கிடந்த உடல்! - டி- ஷர்ட்டால் சிக்கிய கொலையாளிகள் | T-shirt logo helps police to arrest banglore murder culprits

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:53 (12/04/2019)

மதுவுக்காக கொலை; குப்பைத்தொட்டியில் கிடந்த உடல்! - டி- ஷர்ட்டால் சிக்கிய கொலையாளிகள்

கொலை வழக்கு ஒன்றில் டி- ஷர்ட் மூலம் துப்பு துலங்கிய சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.

கொலை

பெங்களூரு மாநகரத்தின் கோக்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர், சத்தியசீலன். 46 வயதான இவர், துப்புரவுப் பணியாளர். கடந்த மார்ச் 24-ம் தேதி இரவு, அந்தப் பகுதியில் இரண்டு பாக்கெட்டுகளில் மதுபானம் வாங்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கும்பல், சத்தியசீலனை சரமாரியாகத் தாக்கியதுடன், அவர் வைத்திருந்த மது பாக்கெட்டுகளைப் பறித்துச்சென்றனர். மேலும், அவரை அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசிச்சென்றனர். மறுநாள் காலை, அந்தப் பகுதியில் உள்ள மக்கள், பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்த சத்தியசீலனை பார்த்துள்ளனர். ஆனால், அவர் குடிபோதையில் இருக்கிறார் என நினைத்து யாரும் அவர் அருகில் செல்லவில்லை. நேரம் ஆக ஆக அவர் அங்கேயே கிடக்க, நிலைமையை உணர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சத்தியசீலனை மீட்டுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார். முதலில் அவர் கீழே விழுந்ததால் உயிரிழந்துவிட்டார் என போலீஸார் நினைத்து விசாரணையில் தீவிரம் காட்டவில்லை.

பின்னர், அவரது உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், அவரது முதுகுப் பகுதியில் குத்துப்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர் போலீஸார். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில், மூன்று மர்ம நபர்கள் பைக்கில் வந்து சத்தியசீலனிடம் சண்டையிட்டு, அவர் கையில் வைத்திருந்த மதுபாட்டில்களைப் பிடுங்குவதும், அதற்காக அவரை கத்தியால் குத்துவதும் பதிவாகியிருந்தது. ஆனால், அவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்த சிசிடிவி காட்சியில் ஒருவர் `L' எனப் பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்ததுதான் போலீஸுக்கு க்ளூவாகக் கிடைத்தது. 

அதைவைத்து விசாரணை செய்ததில், சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கல்லறையில் ஒளிந்து இருந்தது போலீஸுக்கு தெரியவர, அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்தது. அவர்தான் அந்த டி- ஷர்ட் அணிந்திருந்த நபர் என்பதும் தெரியவந்தது. மேலும், மதுவுக்காகத் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக, லோகேஷ் என்னும் அந்த வாலிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரின் தகவலின் பேரில், அவரது நண்பர்கள் செவ்ராஜ், சுனில் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் 21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க