தீ விபத்திலிருந்து 30 பேரைக் காப்பாற்றிய பின் உயிரைவிட்ட நாய்... உத்தரப்பிரதேசத்தில் நெகிழ்ச்சி | Dog saves more than 30 people lives from fire accident

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (13/04/2019)

கடைசி தொடர்பு:19:37 (13/04/2019)

தீ விபத்திலிருந்து 30 பேரைக் காப்பாற்றிய பின் உயிரைவிட்ட நாய்... உத்தரப்பிரதேசத்தில் நெகிழ்ச்சி

நாய்

file pic

மனிதன் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பல விதங்களில் மனிதனுக்கு உறுதுணையாக இருக்கும் நாய்கள், ஆபத்து ஏற்பட்டால் தன்னுடைய உயிரைக் கொடுத்து வளர்ப்பவர்களைக் காப்பாற்றும் என்பதற்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது நேற்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம். அம் மாநிலத்தில் உள்ள பாந்தா (Banda) நகரில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில்தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு அந்தக் குடியிருப்புப் பகுதியின் தரை தளத்தில் திடீரென தீப்பற்றியிருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபர்னிச்சர் ஷோரூம் ஒன்று அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்தது. அதே இடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. அவர்கள்தான் இந்த நாயை வளர்த்து வந்திருக்கிறார்கள்.

தீ விபத்து

நேற்று தீப்பிடித்தவுடன் விடாமல் நாய் குரைக்கத் தொடங்கியிருக்கிறது. எதற்காக நாய் இப்படிக் குரைக்கிறது என்று யோசித்த மேல் தளத்தில் இருந்தவர்கள் கீழே தீப்பிடித்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். உடனடியாக 30 பேர் பாதுகாப்பாக வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கீழ்த்தளத்தில் உள்ள  சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அதனால் வீடும் இடிந்து விழுந்திருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களைக் காப்பாற்றிய நாய் சிலிண்டர் வெடித்ததில் பலியாகியிருக்கிறது.

உத்திர பிரதேசம்

"தீப்பற்றிய இடத்தைப் பார்த்து நாய் விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது, அதனால் எச்சரிக்கை அடைந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்கள். ஆனால் சிலிண்டர் வெடித்ததில் அது பலியாகிவிட்டது" எனச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருக்கிறார். 'ஷார்ட் சர்க்யூட்' காரணமாகவே தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தக்க சமயத்தில் நாய் மட்டும் எச்சரித்திருக்கவில்லையென்றால் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். தற்போது நாயின் செயலால் அனைவரது உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கிறது.