கன்னத்தில் துப்பாக்கி, விபரீதமானது டிக் டாக்!'- நண்பர்களின் விளையாட்டால் பறிபோன உயிர் | Delhi Youth killed while making Tik Tok video with pistol

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (15/04/2019)

கடைசி தொடர்பு:11:42 (15/04/2019)

கன்னத்தில் துப்பாக்கி, விபரீதமானது டிக் டாக்!'- நண்பர்களின் விளையாட்டால் பறிபோன உயிர்

வீடு, கல்லூரி, பள்ளி, பஸ் ஸ்டாப், சாலை என எங்கு நோக்கினும் டிக் டாக்தான். எல்லா இடங்களிலும் டிக் டாக் செய்து பதிவிடத் தொடங்கிவிட்டனர். போக்குவரத்துக் குறைவாக உள்ள சாலையில் அமர்ந்து டிக் டாக் செய்வது, காவல் நிலைய வாசலில் அமர்ந்து டிக் டாக் செய்வது, தண்டவாளம் அருகே அமர்ந்து டிக் டாக் செய்வது என விபரீதமான பாதையில் நம் டிஜிட்டல் யுகம் சென்று கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு விபரீத சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

டிக் டாக் விபரீதம்

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சல்மான் (19), தன் நண்பர்கள் மூன்று பேருடன் நேற்று முன்தினம் (13.4.2019) இரவு, காரில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு நாட்டுத் துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.

சல்மான்

காரின் ஓட்டுநர் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞர் சல்மானின் கன்னத்தில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்தது. இதில், கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததால் சல்மான் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் கூறி சல்மானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சல்மான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.  என்ன செய்வதென்று தெரியாத நண்பர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். உடனே மருத்துவமனை நிர்வாகம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தது.

சல்மானின் அப்பா

கொலை வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் கையில் எப்படி நாட்டுத் துப்பாக்கி வந்தது என்றும் விசாரித்து வருகின்றனர். சல்மானின் அப்பா மருத்துவமனை வாசலில் உடைந்து உட்கார்ந்திருக்கும் காட்சி மேலே... 

டிக் டாக் மோகத்தால் ஓர் உயிர் போனது. டிக் டாக் குறித்து உங்களின் கருத்து என்ன .. இங்கே பதிவு செய்யலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க