`அவர்தான் தடை போட்டார்; இப்போது மாற்றிப் பேசுகிறார்!’- சபரிமலை பிரச்னையில் கொதிக்கும் பினராயி | kerala Chief Minister Pinarayi Vijayan Attack on modi

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (15/04/2019)

கடைசி தொடர்பு:12:15 (15/04/2019)

`அவர்தான் தடை போட்டார்; இப்போது மாற்றிப் பேசுகிறார்!’- சபரிமலை பிரச்னையில் கொதிக்கும் பினராயி

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் கூறி, இரட்டை வேடம் போடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கடந்த வருடம் கோயில் நடை திறக்கப்பட்டபோது பலரும் கோயிலுக்குச் சென்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது சற்று தணிந்துள்ள நிலையில், பா.ஜ.க இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்து வருகிறது.

கடந்த முறை தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகள் விளையாடிக்கொண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்திய பக்தர்களை அம்மாநில அரசு சிறையில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இந்துக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையை கேரள அரசு சீரழிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

மோடி

இந்நிலையில், பிரதமரின் இந்தக் கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பினராயி விஜயன், ``சபரிமலை விவகாரத்தில் மோடி முற்றிலும் பொய் கூறி வருகிறார். சட்டத்தை மதிக்காமல் அதற்கு எதிராகச் செயல்பட்டவர்களைத்தான் மாநில அரசு கைது செய்தது. மோடி மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்து, கேரளாவில் சபரிமலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே மக்கள் கைது செய்யப்படுகிறார்கள் எனப் பிரசாரம் செய்து வருகிறார். இது ஆதாரமற்ற பொய். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பிரதமரும் மதிக்க வேண்டும். மோடி அதை மறந்துவிட்டார். 

பினராயி விஜயன்

சபரிமலை பிரச்னையின்போது அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போட வேண்டும் எனக் கூறியது மத்திய அரசுதான். மேலும், இந்தப் போராட்டத்தை சரிசெய்ய அவர்கள் மத்திய ரிசர்வ் படைகளையும் அனுப்பத் தயாராக இருந்தனர். அப்போது அப்படிப் பேசிவிட்டு தற்போது முற்றிலுமாக மாற்றிப் பேசி இரட்டை வேடம் போடுகிறார் மோடி. கேரளாவில் சங்க் பரிவார் அமைப்பு என்ற பெயரில் சில கிரிமினல்கள் புகுந்து சபரிமலை பக்தர்களைத் தாக்கினர். மதம் என்ற பெயரில் அவர்கள் மக்களைப் பிரிக்க நினைத்தார்கள் அதற்கு அரசு அனுமதிக்கவில்லை. சபரிமலையில் அமைதி நிலவக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி இது. மோடி இதற்குப் பொறுப்பேற்று ஆக வேண்டும்” என காட்டமாகப் பேசினார்.