மோடி படத்துடன் கூடிய டிக்கெட்! - சர்ச்சையில் சிக்கிய ரயில்வே நிர்வாகம் | Train tickets, carrying a picture of PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (15/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (15/04/2019)

மோடி படத்துடன் கூடிய டிக்கெட்! - சர்ச்சையில் சிக்கிய ரயில்வே நிர்வாகம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தை விளம்பரப்படுத்தும் விதமாக டிக்கெட் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மோடி

இந்தியாவில் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11-ம் தேதி நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

டிக்கெட்

Pc : Twitter/@Zebaism

இதற்கிடையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி என்ற ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுக்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில் அரசின் நலத் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டிக்கெட்

Pc : Twitter/@Zebaism

ரிஸ்வி என்ற இளைஞரின் உறவினர் ஏப்ரல் 16-ம் தேதி பாரபங்கியில் இருந்து வாரணாசி செல்லவுள்ளார். இதற்காக ரிஸ்வி நேற்று காலை பாரபங்கி ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துள்ளார். அப்போது டிக்கெட்டின் பின்புறம் மோடியின் புகைப்படம் இருப்பதைக் கண்டுள்ளார். இதை டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடமும் தெரிவித்துள்ளார். இது பற்றி விளக்கம் அளித்துள்ள பாரபங்கி ரயில்வே நிர்வாகம், ‘ பிரதமர் புகைப்படம் கொண்ட இந்த டிக்கெட்டுகள் முன்னதாக அச்சடிக்கப்பட்டவை. தற்போது அவை பயன்படுத்தப்படாமல் வேறு டிக்கெட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவறுதலாகப் பழைய டிக்கெட்டுகளை யாரேனும் மாற்றி இயந்திரத்தில் ஏற்றி இருப்பர்’ எனத் தெரிவித்துள்ளனர். அதே டிக்கெட்டுகள் இன்னும் பலருக்கு வழங்கப்பட்டதாகவும் ரிஸ்வி கூறியுள்ளார்.

டிக்கெட்டில் பிரதமரின் படம் இருந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு அவரின் திட்டங்களைப் பிரபலப்படுத்த இவ்வாறு செய்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டியுள்ளனர்.