பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்... எந்தக் கட்சிக்கு பேங்க் பேலன்ஸ் அதிகம்? | BSP Has Biggest Bank Balance Among Parties With Rs 670 Crore in Accounts

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:40 (15/04/2019)

பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்... எந்தக் கட்சிக்கு பேங்க் பேலன்ஸ் அதிகம்?

பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகை வங்கிக் கணக்கில் இருப்பில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

பாஜக, காங்கிரஸ் வங்கி இருப்புத் தொகை

அரசியல் கட்சிகள்,  தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வரவு - செலவு கணக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில், 2018 டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியின் வங்கி இருப்புத் தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி, 8 பொதுத் துறை வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்துள்ளதாகவும், அவற்றில் மொத்தம் 669 கோடி ரூபாய் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், 95.54 லட்ச ரூபாய் ரொக்கமாகக் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்கட்சி, தனது வங்கிக் கணக்கில் 471 கோடி ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து அக்கட்சியின் வங்கி இருப்பில் 11 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்து போனது. 

இந்த நிலையில், 196 கோடி ரூபாய் வங்கி இருப்புடன் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்தவுடன், கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த கணக்கு விவரங்களின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கி இருப்புத் தொகை

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 107 கோடி ரூபாய் இருப்புடன் தெலுங்கு தேசம் கட்சி நான்காவது இடத்திலும், 82 கோடி ரூபாய் இருப்புடன் பா.ஜ.க ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இதில் பா.ஜ.க, 2017-18-ம் ஆண்டில் 1,027 கோடி ரூபாய் நிதி திரட்டியதாகவும், அதில் 758 கோடி ரூபாயைச் செலவழித்துவிட்டதாகவும் கூறியுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், மேற்கூறிய காலகட்டத்தில் மிக அதிகமாகச் செலவழித்த கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. 

பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா 3 கோடி ரூபாயை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துள்ளன. 

அரசியல் கட்சிகளின் வருமான வரிக் கணக்குகள் தொடர்பாக பகுப்பாய்வு மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், `` 2017-18-ம் ஆண்டில் நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மிக அதிக வருவாய் ஈட்டிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. காங்கிரஸ் கட்சி 2016-17-ம் ஆண்டில் 225 கோடி வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்திருந்ததே தவிர,  2017-18-ம் ஆண்டுக்கான வருவாய் என்ன என்பதைத் தெரிவிக்கவில்லை" எனக் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகளின் வருவாயில் சுமார் 87 சதவிகிதம் நன்கொடை மூலமே பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க