`ஷூ 399 ரூபாய், பில் போட்டது 402 ரூபாய்!'- கோர்ட்டுக்கு சென்று `பாட்டா'வை கலங்கடித்த வாடிக்கையாளர் | Bata fined Rs 9,000 for  collecting Rs 3 for paper bag

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (15/04/2019)

கடைசி தொடர்பு:13:23 (19/04/2019)

`ஷூ 399 ரூபாய், பில் போட்டது 402 ரூபாய்!'- கோர்ட்டுக்கு சென்று `பாட்டா'வை கலங்கடித்த வாடிக்கையாளர்

பெரிய பெரிய ஷாப்பிங் மால், பிராண்டட் விற்பனையகங்கள் உள்ளிட்ட இடங்களில், பிளாஸ்டிக் பைகளுக்கு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை வசூலிப்பது வழக்கம். பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த பிறகு, பேப்பர் பை, துணி பை  ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. அதற்கும் தனியாக பணம் செலுத்த வேண்டும். அந்தப் பைகளை நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். ஆனால், அதில் அந்த நிறுவனத்தின் பெயர் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும். இது, அந்த நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடும் செயல்தானே. அதற்கு ஏன் நாம் காசு கொடுக்க வேண்டும் என்று நமக்கு என்றாவது தோன்றியிருக்கலாம். ஆனால் நாம் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம்.

ஷாப்பிங்

சண்டிகரைச் சேர்ந்த ஒருவர், பைகளுக்கு காசு வசூலித்த பிரபல பிராண்டட் ஷூ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வென்றுள்ளார். இந்தியாவில், முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனம் பாட்டா. சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி பாட்டா ஷோ ரூமுக்கு ஷூ வாங்கச் சென்றுள்ளார். ரூ.399 மதிப்புள்ள ஷுவை வாங்கியுள்ளார். ஆனால், ரசீதில் ரூ.402 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ரூபாய், பேப்பர் பையின் கட்டணமாகப் பதிவிட்டிருந்தனர். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த தினேஷ், நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். `பேப்பர் பையில் பாட்டாவின் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதமாக அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு நான் ஏன் காசு தர வேண்டும்’ என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

பாட்டா

`வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் பை வழங்க வேண்டும் என்பதே முறை. சுற்றுச்சூழல்மீது அக்கறை உடைய நிறுவனம் என்றால் பாட்டா பேப்பர் பைகளை இலவசமாகக் கொடுத்திருக்க வேண்டும். எனவே, பாட்டா நிறுவனம், தினேஷ் பிரசாத்தின் 3 ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும். அதனுடன், இந்த வழக்குக்கு அவர் செலவு செய்ததற்கு இழப்பீடாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் கொடுத்ததற்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும். மாநில நுகர்வோர் மறுவாழ்வு ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் ரூ.9000 பாட்டா நிறுவனம் அபராதமாகச் செலுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இனி, தினேஷ் பிரசாத்தைப் போன்று பைகளுக்குக் காசு வாங்கினால்,  நீங்களும் வழக்கு தொடர்வீர்களா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க