`யோகிக்கு 72 மணி நேரம்; மாயாவதிக்கு 48 மணி நேரம்!'- பிரசாரத்துக்குத் தடை போட்ட தேர்தல் ஆணையம் | Election Commission bans Yogi Adityanath and Mayawati from election campaigning

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (15/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (15/04/2019)

`யோகிக்கு 72 மணி நேரம்; மாயாவதிக்கு 48 மணி நேரம்!'- பிரசாரத்துக்குத் தடை போட்ட தேர்தல் ஆணையம்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மாயாவதி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக, கடந்த 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் பேசிய மாயாவதி, ``முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். உங்கள் வாக்குகளை உங்கள் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பதிவிட வேண்டாம். பா.ஜ.க-வை வீழ்த்த எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

யோகி ஆதித்யநாத்

இதற்குப் பதிலளித்த யோகி ஆதித்யநாத், ``மாயாவதி கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. முஸ்லிம் வாக்குகளை மட்டும் விரும்புகிறார்கள். காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' எனப் பேசினார். இப்படி இருவரும் மதத்தை வைத்து பிரசாரம் செய்தனர். இந்த விவகாரம், தேர்தல் ஆணையத்தில் புகாராகச் செல்ல, விளக்கம் கோரி இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தேர்தல் ஆணையம் 

இந்நிலையில், இன்று யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு பிரசாரம் செய்யத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 'அரசியலமைப்பு விதிகளின்படி, மதம் மற்றும் சாதியை வைத்து பிரசாரம் செய்ய தடை உள்ளது. ஆனால், விதிமீறி இருவரும் வெறுப்புணர்வுடன் பேசியதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் மூன்று நாள்களுக்கு யோகி ஆதித்யநாத்தும், இரண்டு நாள்களுக்கு மாயாவதியும் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க